×

10 வது புரோ கபடி லீக்; இளம் சிங்கங்களுடன் களமிறங்கும் தமிழ் தலைவாஸ்: பவன் ஷெராவத்தை கழற்றி விட்டது

மும்பை:10வது புரோ கபடி லீக் (பி.கே.எல்) தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் வருகிற செப்டம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் மும்பையில் நடைபெற உள்ளது. இந்நிலையில், தொடரில் பங்கேற்கும் 12 அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்கப்பட்ட மற்றும் கழற்றி விடப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளன.

இந்த நிலையில், 105 பி.கே.எல்/ போட்டிகளில் 987 புள்ளிகளைப் பெற்ற நட்சத்திர வீரர் பவன் ஷராவத்தை தமிழ் தலைவாஸ் அணி கழற்றிவிட்டுள்ளது. இதேபோல், மற்ற அணிகளும் சில நட்சத்திர வீரர்களை கழற்றிவிட்டுள்ளன. கடந்த புரோ லீக் கபடி தொடரில் தமிழ் தலைவாஸ் அணி பவன் ெஷராவத்தை ரூ.2.26 கோடி கொடுத்து ஏலம் எடுத்தது.

இது பி.கே.எல் தொடரில் வரலாற்றில் மிகவும் விலை உயர்ந்த வீரராக அவரை மாற்றியது. ஆனால், அவர் களமிறங்கிய முதல் ஆட்டத்தின் 10வது நிமிடத்திலேயே படுகாயம் அடைந்து வெளியேறினார். அறுவை சிகிச்சை காரணமாக அவர் தொடரில் இருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டது. அவர் போன்ற பெரிய நட்சத்திரங்கள் இல்லாத தமிழ் தலைவாஸ் அணி பயிற்சியாளர் அஷன்குமார் கீழ் வெற்றி நடைபோட்டது. மேலும் அரையிறுதி வரை சென்று சாதனை படைத்தது.

தற்போது அதேபோன்ற ஒரு அணியை கட்டமைக்க தமிழ் தலைவாஸ் அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதனால், பவனை அதிக விலை கொடுத்து தக்க வைக்க இயலாது. அவருக்கு செலவழிக்கும் தொகையை அனுபவம் மற்றும் இளம் வீரர்களுக்கு செலவு செய்து இன்னும் வலுவான அணியை சீரமைக்க முடிவு செய்துள்ளது. அதனால், பவனை அவர்கள் அணியில் இருந்து கழற்றிவிட்டுள்ளனர்.

முந்தைய சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் ரைடர் நரேந்தர், ஹிமான்ஷு, எம்.அபிஷேக், மொஹிர் மற்றும் இளம் கேப்டன் சாகர் ஆகியோரை தமிழ் தலைவாஸ் அணி தக்கவைத்துள்ளது. இதேபோல், அணியை கம்பேக் கொடுக்க வைத்த பயிற்சியாளர் அஷன் குமாரின் சேவையையும் அணி தக்க வைத்துள்ளது. குறைந்தபட்சமாக அவர் 2025 வரை அணியை வழிநடத்துவார்.

இதேபோல், டூ-ஆர்-டை ரெய்டு ஸ்பெஷலிஸ்ட் அஜிங்க்யா பவாரையும் அணி தக்கவைத்துள்ளது. அவரது சிறப்பான ஆட்டமும், கேப்டனாக அணியை அவர் வழிநடத்திய விதமும் அனைவரையும் ஈர்த்தது. குறிப்பாக சாகர் காயம் அடைந்த பிறகு, அணியை தனது தோளில் சுமந்து வழி நடத்தி இருந்தார். தமிழ் தலைவாஸ் பிகேஎல் சீசன் 10க்காக தக்கவைக்கப்பட்ட வீரர்கள் விவரம்

எலைட் வீரர்கள்: அஜிங்க்யா பவார்
தக்கவைக்கப்பட்ட இளம் வீரர்கள்: சாகர், ஹிமான்ஷு, எம்.அபிஷேக், சாஹில், மோஹித், ஆஷிஷ்
தக்க வைக்கப்பட்ட புதிய இளம் வீரர்கள்: நரேந்தர், ஹிமான்ஷு, ஜதின்.

The post 10 வது புரோ கபடி லீக்; இளம் சிங்கங்களுடன் களமிறங்கும் தமிழ் தலைவாஸ்: பவன் ஷெராவத்தை கழற்றி விட்டது appeared first on Dinakaran.

Tags : 10th Pro Kabaddi League ,Tamil Thalaivas ,Pawan ,Sherawat ,MUMBAI ,Pro Kabaddi League ,PKL ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…