
டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர், இதர ஆணையர்களை நியமிக்கும் குழுவிலிருந்து தலைமை நீதிபதியை நீக்கும் சட்டத்திருத்தத் மசோதாவை தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சியினர் முழக்கம் எழுப்பினர். எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கபட்டது.
தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் மற்றும் தேர்தல் அதிகாரிகளை ஒன்றியஅரசே இதுவரையில் நியமித்து வந்தது. ஓய்வு பெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை தேர்தல் அதிகாரிகளாக நியமித்து பின்னர் பதவி மூப்பு காரணமாக அவர்களை தலைமை தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள்.
பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய குழு சிபிஐ உயர்மட்ட குழு தலைவரை தேர்வு செய்வது போல , தலைமை தேர்தல் அதிகாரி, தேர்தல் அதிகாரிகளையும் உச்சநீதிமன்ற நீதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் அடங்கிய குழு தேர்வு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன், காலீஸ்வரம் ராஜ், கோபால் சங்கரநாராயணன் ஆகியோர் பொதுநலமனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையில், தலைமை தேர்தல் அதிகாரியை நியமிப்பது அரசின் நிர்வாக பணிகளில் ஒன்று, தேர்தல் ஆணையர் என்பவர் சுதந்திரமாக செயல்படுபவர். அவரை நியமிப்பது ஒன்றிய அரசுதான் என வாதிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, பிரதமர், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று புதிய சட்டம் மசோதாவை ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்ய இருந்தார்.
இந்த மசோதாவில், தலைமை தேர்தல் அதிகாரியை தேர்ந்தெடுக்கும் குழுவில், பிரதமர், பிரதமரால் தேர்ந்தெடுக்கப்படும் ஒன்றிய அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இடம் பெற்று இருப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை மாநிலங்களவையில் இன்று ஒன்றிய அமைச்சர் தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சியினர் முழக்கம் எழுப்பினர். எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கபட்டது.
The post தலைமை தேர்தல் ஆணையர் நியமன மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.