×

மாமல்லபுரம் அருகே கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலைக்கு 21ம் தேதி அடிக்கல்: முன்னேற்பாடுகளை அமைச்சர்கள் ஆய்வு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலைக்கு வரும் 21ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். இதையடுத்து, ஆலை அமையவிருக்கும் இடத்தில் நேற்று மாலை அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். மாமல்லபுரம் அருகே பேரூரில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில், வரும் 21ம் தேதி 400 மில்லியன் லிட்டர் அளவு கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக்கும் 3வது ஆலைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

இவ்விழாவுக்கான பிரமாண்ட மேடை அமைக்கவும், அங்கு 10 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், அங்கு ஜேசிபி இயந்திரம் மூலமாக நிலத்தை சமன்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலையின் அடிக்கல் நாட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை நேற்று மாலை அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் ஆகிய இருவரும் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

அங்கு எந்த இடத்தில் பிரமாண்ட மேடை அமைக்க வேண்டும், முதல்வரை எவ்வழியாக அழைத்து வருவது, பார்வையாளர்கள் அமரும் இருக்கைகளின் எண்ணிக்கை உள்பட அனைத்து முன்னேற்பாடு பணிகள் குறித்து  அதிகாரிகளிடம் அமைச்சர்கள் ஆலோசித்தனர். அப்போது, அங்குள்ள முட்புதர் செடிகளை அகற்ற வேண்டும் என அமைச்சர்கள் அறிவுறுத்தினர்.

மேலும், அங்கு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில், நெம்மேலியில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக்கும் 2வது ஆலையில் நடைபெறும் கடல்சார் பணிகள், இயந்திரவியல் மற்றும் மின்சாரம் கருவிகள் நிறுவும் பணிகள், கடல்நீரை நிலையத்துக்கு உள்கொணரும் குழாய் மற்றும் நிராகரிக்கப்பட்ட உவர்நீரை கடலுக்கு வெளியேற்றும் குழாய், கடல்நீரை உள் வாங்கும் ஆழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, காற்றழுத்தம் மூலம் எண்ணெய் மற்றும் கசடுகளை அகற்றும் தொட்டி, வடிகட்டப்பட்ட கடல் நீர்த்தேக்கத் தொட்டி, வடிகட்டப்பட்ட கடல்நீர் உந்து நிலையம் உள்பட பல்வேறு கட்டுமானப் பணிகளை அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில், பேரூரில் வரும் 21ம் தேதி கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக்கும் 3வது ஆலைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். இப்பணிகள் முடிந்து குடிநீர் வினியோகிக்கும் பட்சத்தில் 22.62 லட்சம் மக்கள் பயனடைவார்கள்.

இதன் பரப்பளவு 85.51 ஏக்கர் ஆகும். இதற்காக 48 கிமீ தூரத்துக்கு ராட்சத பைப்லைன் புதைக்கப்பட்டு உள்ளது. 42 மாதங்களுக்குள் இப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும், அருகிலுள்ள 150 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் 2வது ஆலையை அடுத்த மாதம் முதல்வர் துவக்கி வைக்கிறார். தற்போது இந்த 2வது ஆலையின் பணிகள் முழுமை பெறும் நிலையில் உள்ளது. வரும் பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார்நிலையில் உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

The post மாமல்லபுரம் அருகே கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலைக்கு 21ம் தேதி அடிக்கல்: முன்னேற்பாடுகளை அமைச்சர்கள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Chief Minister ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி...