கோவை: கோவையில் முதியவரை அடித்துக்கொன்ற இந்து மக்கள் கட்சியை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.கோவை கே.கே.புதூர் பகுதியில் 24 வயது வாலிபர் தன் மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் மேற்கூரை ஓடுகளால் வேயப்பட்ட வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் இவரது மனைவி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தபோது வீட்டின் மேல் பகுதியில் ஏறிய சாயிபாபா காலனியை சேர்ந்த முஸ்தாக் அகமது (60) என்பவர் ஓடுகளை பிரித்து அப்பெண் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை பார்த்ததாக கூறப்படுகிறது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் கூச்சலிட்டார்.
அப்போது அங்கிருந்த அவரது உறவினர்கள் முஸ்தாக் அகமதுவை பிடித்து தாக்கினர். உடலில் காயத்துடன் அங்கிருந்து அவர் சென்று விட்டார். சிறிது தூரம் சென்ற அவர் சாலையோர கால்வாயில் மயங்கி விழுந்தார்.தலையில் காயத்துடன் கிடந்த முஸ்தாக் அகமது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாக சாயிபாபாகாலனி போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் முஸ்தாக் அகமதுவை தாக்கியது கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ராகுல் (24), அவரது அண்ணன் மணிகண்டமூர்த்தி (27), இவர்களின் நண்பரான மனோஜ் (26) ஆகிய 3 பேர் என தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், கைதான 3 பேரும் இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
The post முதியவர் அடித்துக் கொலை: இந்து மக்கள் கட்சியினர் 3 பேர் கைது appeared first on Dinakaran.
