×

யூடியூப் சேனல் நடத்துவதில் மோதல்; வாலிபரை தாக்கி காரில் கடத்திய கும்பல்; 12 பேர் கைது; 70 செல்போன், 5 லேப்டாப், 6 பைக் பறிமுதல்

தர்மபுரி: தர்மபுரியில், யூடியூப் சேனல் நடத்துவதில் ஏற்பட்ட மோதலில் வாலிபரை தாக்கி காரில் கும்பல் கடத்திச்சென்றனர். போலீசார் சினிமா போன்று விரட்டிச் சென்று மீட்டனர். இது தொடர்பாக 12பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 70 செல்போன், 6 பைக், 5 லேப்டாப்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் முக்கல்நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் (31).

இவர் தர்மபுரியில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவரது நண்பர் பழைய தர்மபுரி முத்துப்பட்டியை சேர்ந்த சின்னசாமி (38). இவரும் சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவரது தம்பி ராமகிருஷ்ணனும் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவர்கள் மூன்று பேரும் நண்பர்கள். இந்நிலையில் சின்னசாமி யூடியூப் சேனல் லாக் செய்யும் நிலைக்கு வந்துள்ளது.

இதற்கு ஆனந்தகுமார் தான் காரணம் என்று நினைத்து, நேற்று அவருடைய தர்மபுரி அலுவலகத்துக்கு நேரடியாக சின்னசாமி உள்ளிட்ட 12 பேர் சென்றனர். அப்போது அங்கு ஆனந்தகுமாருக்கும், சின்னசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆனந்தகுமாரை கத்தியை காட்டி மிரட்டி தாக்கியுள்ளனர். பின்னர் ஒரு கட்டத்தில் ஆனந்தகுமாரை காரில் கடத்திச் சென்றனர்.

இத்தகவல் தர்மபுரி எஸ்பிக்கு சென்றது. இதையடுத்து தர்மபுரி எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் ஒரு படையினரும், டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் ஒரு தனிப்படை போலீசாரும் கடத்தல்காரர்களை தேடினர். ஒரு பிரிவினர் கடத்தல் காரை பின்தொடர்ந்து சென்றனர். குண்டல்பட்டி தனியார் பொறியியல் கல்லூரி அருகே போலீசார் காரை சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர். காரில் இருந்தவர்களையும், காருக்கு பின்னால் டூவீலரில் வந்தவர்களையும் போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

அவர்களிடம் இருந்து 70 செல்போன், 6 பைக், ஒரு கார், 5 லேப்டாப் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கிடையில் ஆனந்தகுமார் யூடியூப் சேனல் அலுவலகத்தில் பணியாற்றும் பிரேம்குமார், தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதில், சின்னசாமி உள்ளிட்ட 12 பேர் கொண்ட கும்பல் ஆனந்தகுமாரை தாக்கி கடத்தினர். அப்போது அலுவலகத்தில் இருந்து 70 செல்போன், 5 லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர் என தெரிவித்திருந்தார்.

அதன்பேரில் தர்மபுரி டவுன் போலீசார் 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சின்னசாமி (38), சீராளன் (30), சுந்தரம் (30), ரவி (39), முருகன் (26), ராமு, சுரேஷ்(35), சதீஷ் (35), பெரியசாமி (27), சந்திரன் (29), தினேஷ்குமார்(23), மணி (25) ஆகிய 12 பேரை கைது செய்தனர்.

முதல்கட்ட விசாரணையில், ஆனந்தகுமார், சின்னசாமி, ராமகிருஷ்ணன் ஆகியோர் ஒன்றாக இணைந்து ஒரு யூடியூப் சேனல் நடத்தியுள்ளனர். பின்னர் தனித்தனியாக யூடியூப் சேனல் நடத்தியுள்ளனர். இதில் சின்னசாமி யூடியூப் சேனல் லாக் ஆகும் நிலைக்கு வந்தது. ஆனந்தகுமார்தான் இந்த செயல் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், சின்னசாமி அடியாட்களுடன் சென்று ஆனந்தகுமாரை தாக்கி காரில் கடத்தியுள்ளார் என்பது தெரியவந்தது. கைதானவர்களிடம் தர்மபுரி டவுன் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post யூடியூப் சேனல் நடத்துவதில் மோதல்; வாலிபரை தாக்கி காரில் கடத்திய கும்பல்; 12 பேர் கைது; 70 செல்போன், 5 லேப்டாப், 6 பைக் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : YouTube ,Dharmapuri ,
× RELATED யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்தவர் கைது..!!