×

பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சென்னையில் கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை : அன்புமணி ராமதாஸ்

சென்னை: “பொதுமக்களின் குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சென்னையில் கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சியும், காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ பகுதியில் சாலையில் கட்டுப்பாடின்றி திரிந்த பசு மாடு, அவ்வழியே சென்ற பள்ளிக் குழந்தையை முட்டித் தூக்கி வீசியதில் அந்தக் குழந்தை படுகாயமடைந்து மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார். பள்ளி சென்று திரும்பிய குழந்தை வீட்டுக்கு செல்வதற்கு பதிலாக மருத்துவமனைக்கு சென்றிருப்பது வேதனையளிக்கிறது. காயமடைந்த குழந்தை விரைவில் முழு நலம் பெற்று வீடு திரும்ப எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பள்ளிக் குழந்தை முட்டித் தூக்கி வீசப்பட்டது மட்டுமின்றி, சாலை விபத்துகளுக்கும் கால்நடைகள் காரணமாக உள்ளன. சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும், அதிக போக்குவரத்து நிகழும் கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையிலும் கால்நடைகள் திடீரென சாலைகளுக்குள் நுழைவதால் அதிக விபத்துகள் நடக்கின்றன; அதனால் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இவை தடுக்கப்பட வேண்டும்.

சென்னை மாநகர எல்லைக்குள் கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கால்நடைகளைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாதது தான் இதற்கு காரணம். சென்னை மாநகரில் கால்நடை வளர்ப்பை சட்டத்தின் வழியாக மட்டுமே பார்க்க முடியாது. கால்நடைகள் சென்னையின் பூர்வகுடி மக்களின் வாழ்வாதாரம் சார்ந்தவை என்பதால், அந்தக் கோணத்திலும் தான் பார்க்க வேண்டியுள்ளது. அதேநேரத்தில் கால்நடைகளால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதை அனுமதிக்க முடியாது.

பொதுமக்களின் குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சென்னையில் கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சியும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

The post பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சென்னையில் கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை : அன்புமணி ராமதாஸ் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Annpurani Ramadas ,Chennai Corporation ,Department of the Guaranteed ,
× RELATED தமிழகத்தில் 188 இடங்களில் தண்ணீர்...