×

நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனின் 8 அடி உயர வெண்கல சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை, நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேராசிரியர் க.அன்பழகன் திருவுருவச் சிலையினை திறந்து வைத்தார்.‘இனமான பேராசிரியர்’ என்று கலைஞரால் பெருமிதத்தோடும். பேரறிஞர் அண்ணாவால் “பேராசிரியர் தம்பி” என்று அன்போடும் அழைத்துப் போற்றப்பட்டவர் பேராசிரியர் க.அன்பழகன். பேராசிரியர் க. அன்பழகன் திருவாரூர் மாவட்டம், காட்டூர் கிராமத்தில் 19.12.1922 அன்று பிறந்தார். படிக்கின்ற காலத்தில் தந்தை பெரியார் அவர்களின் சமூக சீர்திருத்தக் கொள்கைகளாலும், பேரறிஞர் அண்ணாவின் தமிழ் உணர்வுமிக்க பேச்சாற்றாலின்பாலும் ஈர்க்கப்பட்டு, பொது வாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

பள்ளிப் பருவத்திலேயே தமிழ் மொழியின் மீது தீவிர பற்று கொண்டிருந்தார்.  உயர் படிப்பு படிக்கின்ற காலத்தில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கியம் முதுகலைப் படிப்பை முடித்தார். 1944 முதல் 1957 ஆம் ஆண்டு வரையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்.பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற நாட்களிலும், துணைப் பேராசிரியாக பணியாற்றிய காலங்களிலும் திராவிட இயக்கத்தின்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, பொது வாழ்க்கையில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். பேரறிஞர் அண்ணா பங்கேற்ற விழாவில், பேராசிரியர் ஆற்றிய உரையே அவர் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது.

1962ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், 1967 ஆண்டு தொடங்கி 1971 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும். தொடர்ந்து 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் திறம்படப் பணியாற்றியுள்ளார். கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்ற காலத்தில் மக்கள் நல்வாழ்வு, சமூக நலத்துறை, நிதி மற்றும் கல்வித் துறை அமைச்சராக பணியாற்றினார். தான் அமைச்சராக பதவி வகித்த துறைகளில் எல்லாம் தனது முதிர்ந்த அனுபவத்தாலும், தொலைநோக்குப் பார்வையாலும் பல்வேறு திட்டங்களைத் திறம்பட செயல்படுத்தியுள்ளார்.பேராசிரியர் க.அன்பழகன் எழுதிய சிறப்பு மிக்க நூல்களில் ‘தமிழர் திருமணமும் இனமானமும்’, ‘நீங்களும் பேச்சாளர் ஆகலாம்!. ’தமிழ்வானின் விடிவெள்ளி தந்தை பெரியார்’ ’மாமனிதர் அண்ணா’, ’தமிழின காவலர் கலைஞர்’ ‘திராவிட இயக்கத்தின் வரலாறு’ ஆகியவை இன்றளவும் பேசப்பட்டு வருகின்றது. மேலும், 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

பேராசிரியர் க.அன்பழகன் தனது பேச்சாற்றலாலும் செயல்பாடுகளாலும்  பொது வாழ்வில் தனக்கென தனி இடம் பிடித்தார். அன்னாரது புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை, நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் 8 அடி உயர வெண்கல திருவுருவச் சிலையினை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், க.அன்பழகனின் குடும்பத்தினர்கள்,  நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

The post நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனின் 8 அடி உயர வெண்கல சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Prof. ,Anbazhagan ,Nungambakkam TBI ,Chennai ,Tamil Nadu ,M.K.Stalin ,Tamil Nadu government ,Nungambakkam Professor Anbazagan Educational Complex ,Anbazagan ,
× RELATED பேராசிரியர் பாலசுப்ரமணியன் மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்