ஓசூர், ஆக.10: ஓசூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் புவனேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஓசூர் வட்டாரத்தில், விவசாயிகள் துவரை உற்பத்தியை பெருக்கவும், சாகுபடி செலவை குறைத்து, அதிக வருவாய் ஈட்டவும், சுய தேவையை பூர்த்தி செய்து கொள்ளவும், வேளாண் துறை மூலம் பி.ஆர்.ஜி., 5 என்ற ரகம் தற்போது விதைப்புக்கு சிபாரிசு செய்யப்படுகிறது. ஓசூர் வேளாண் விரிவாக்க மையத்தில் பி.ஆர்.ஜி., 5 ரகம், 6.8 டன் இருப்பு உள்ளது. இவை 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படுகிறது. இந்த ரக துவரை சாகுபடியை, அனைத்து விதமான பயிர்களின் வரப்பு ஓரங்களில் அடி 3 இடைவெளி விட்டு வரப்பு பயிராக சாகுபடி செய்யலாம்.
இது 160 முதல் 180 செ.மீ., உயரம் வரை வளரும் தன்மையுடையது. துவரை பயிர்களில் தற்போது நுனி கிள்ளுவதன் மூலம், அதிக பக்க கிளைகள் உருவாகி, அதிக காய்கள் உருவாகும். பூக்கள் பூக்க துவங்கும் பருவத்தில் ஏக்கருக்கு 2 கிலோ தமிழக வேளாண் பல்கலைக்கழக பயறு வொண்டரை 200 லிட்டர் நீரில் ஒட்டும் பசையுடன் கலந்து தெளிக்க வேண்டும். இதனால் பூக்கள் உதிர்வது குறைந்து அதிக மகசூல் கிடைக்கும். அத்துடன் வறட்சியை தாங்கி வளரும். பயிறு வகை பயிர்களில் சாறு உறுஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 50 சதவீத வேப்பங் கொட்டை கரைசலை புதிதாக தயார் செய்து தெளிக்க வேண்டும். இதன் மூலம் துவரை சாகு படியை அதிகரிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post ஓசூர் வட்டார விவசாயிகளுக்கு 50% மானியத்தில் துவரை விதை appeared first on Dinakaran.