×
Saravana Stores

ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

சென்னை: சென்னையில் ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு அனைத்து முருகன் கோயில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடு கோலாகலமாக நடைபெற்றது. தமிழ் கடவுளான முருகனை வழிபாட உகந்த நாளான ஆடி கிருத்திகை நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த ஆடி கிருத்திகையில் முருகனை வழிபடுவது சகல நன்மையும் பெற்று தரும் என்பது ஐதீகம். இந்த நாளில் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்துவர்.
இந்நிலையில், சென்னையில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு அனைத்து முருகன் கோயில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடு கோலாகலமாக நடைபெற்றது.

குறிப்பாக சென்னையில் உள்ள வடபழனி ஆண்டவர் கோயில், கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி கோயில், அறுபடைவீடு கோயில், குன்றத்தூர் முருகன் கோயில், அயனாவரம் மேல் பழனி ஆண்டவர் கோயில், கொசப்பேட்டை கந்தசாமி கோயில், செங்குந்த கோட்டம் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதிகாலை முதல் பக்தர்கள் முருகனை தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் நெரிசல் இன்றி தரிசனம் செய்யும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக வடபழனி முருகன் கோயிலில் இந்த ஆண்டு ஆடி கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொது தரிசனம் தவிர சிறப்பு தரிசனத்திற்காக ஐம்பது ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல மேற்கு மற்றும் தெற்கு வாசலும், வெளியேற வடக்கு மற்றும் கிழக்கு வாசலும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தையுடன் வருபவர்களுக்கு மேற்கு வாயிலில் சிறப்பு வழி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதே போல், நேர்த்திக் கடன் செலுத்த வருபவர்களுக்கும் மேற்கு கோபுரவாசலில் அனுமதி அளிக்கப்பட்டது.

நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தொடர்ச்சியாக பள்ளி எழுச்சி பூஜை, அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம் , உச்சிகால பூஜை, ராஜ அலங்காரம் உள்ளிட்டவை நடைபெற்றது. நேற்று நாள் முழுவதும் நடை மூடப்படாமல் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னையில் பக்தர்கள் பாதுகாப்புடன் வந்து செல்வதற்காக 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களுக்கு வள்ளி மண்டபம் அடுத்த பசுமடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

The post ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Murugan Temples ,Chennai ,Aadi Krittikai festival ,Murugan ,
× RELATED சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே தடம் புரண்டது