×

அரிசி விலை உயர்வுக்கு ஒன்றிய அரசுதான் காரணம்: ஆலை உரிமையாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு

திருவாரூர்: தமிழகத்தில் அரிசி விலை உயர்வுக்கு ஒன்றிய அரசுதான் காரணம் என தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் திருவாரூரில் நேற்று நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்த சிவகங்கை மாவட்ட பொருளாளர் முகமது மீரா அளித்த பேட்டி: தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் பாண்டிச்சேரி மாநில பொதுமக்கள் உணவுத் தேவைக்கு புழுங்கல் அரிசியை அதிகம் பயன்படுத்துகின்றனர். தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் புழுங்கல் அரிசி கிலோவிற்கு ரூ.10 முதல் ரூ.15 வரை விலை உயர்ந்துள்ளது. இதற்கு முழு காரணம் ஒன்றிய அரசுதான். பொதுவாக அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிப்பதாக தெரிவித்து விட்டு, பச்சரிசிக்கு மட்டும் தடை விதித்துள்ளனர்.

புழுங்கல் அரிசிக்கு தடை விதிக்காததால், வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதன் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. வரும் மாதங்களில் கிலோவிற்கு ரூ.30 வரை உயர வாய்ப்புள்ளது. பாஜ ஆளும் மாநிலங்களில் அவர்கள் அதிக அளவில் பச்சரிசி பயன்படுத்துவதால் அங்கு பச்சரிசியின் விலை குறைந்துள்ளது. இதன்மூலம் அந்த மாநிலங்களுக்கு மட்டும் சலுகைகளை ஒன்றிய அரசு செய்துள்ளது. எனவே புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு உடனடியாக தடை விதித்தால் மட்டுமே வரும் காலங்களில் இந்த விலை உயர்வு குறைய வாய்ப்பு உள்ளது. விலை உயர்வால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. அவர்கள் அரசு நிர்ணயித்துள்ள விலையில் மட்டுமே நெல்லை விற்க முடியும். ஆனால் இடைப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொள்ளை லாபம் கிடைக்கும் என்பதால் உடனடியாக ஒன்றிய அரசு புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post அரிசி விலை உயர்வுக்கு ஒன்றிய அரசுதான் காரணம்: ஆலை உரிமையாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Union government ,Thiruvarur ,Tamil Nadu Rice Mill Owners' Association ,Tamil Nadu ,Mills Owners' Association ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...