×

ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன், மகளுக்கு மருத்துவ சீட்: அரசு உதவி கேட்டு பெற்றோர் காத்திருப்பு

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி மகனுக்கு எம்பிபிஎஸ், மகளுக்கு கால்நடை மருத்துவ சீட் கிடைத்துள்ளது. இவர்கள் மேற்படிப்பை தொடர அரசு உதவி கேட்டு பெற்றோர் காத்திருக்கின்றனர்.
சங்கரன்கோவில் அருகே நவநீதகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகசாமி, ஆடுமேய்க்கும் தொழிலாளி. இவரது மனைவி வள்ளியம்மாள். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர்களுக்கு முருகராஜ் (18) என்ற மகனும், முத்துலட்சுமி (17) என்ற மகளும் உள்ளனர். சங்கரன்கோவிலிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த முருகராஜ் கடந்த ஆண்டும், முத்துலட்சுமி இந்த ஆண்டும் 12ம் வகுப்பில் முறையே 561, 583 மதிபெண்கள் பெற்றனர்.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் முத்துலட்சுமி வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் 200 மதிப்பெண்கள் பெற்று 3வது இடம் பிடித்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக அதில் சேர முடியாமல் இருந்துள்ளார். இந்நிலையில் ஜூலை மாதம் வெளியிடப்பட்ட கால்நடை மருத்துவ தரவரிசை பட்டியலில் முத்துலட்சுமி மாநில அளவில் 3ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். சிறு வயதிலிருந்து மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு படித்த முருகராஜ் குமரி மாவட்டத்திலுள்ள ஒரு பயிற்சி மையத்தில் நீட் தேர்விற்கு பயிற்சி பெற்று முதல்முறையிலேயே 572 மதிப்பெண்கள் பெற்று தேர்வானார்.

இதையடுத்து அவருக்கு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. முத்துலட்சுமி கால்நடை மருத்துவ படிப்பை சென்னை அல்லது நாமக்கல்லில் படிக்க முடிவு செய்துள்ளதாக ெதரிகிறது. ஆடு மேய்க்கும் கூலித் தொழிலாளியின் பிள்ளைகளான இருவரும் மருத்துவ படிப்பிற்கு தேர்வாகி சாதனை புரிந்துள்ளதை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இருவரும் தங்கள் படிப்புக்கு அரசு உதவித்தொகையை எதிர்பார்த்து உள்ளனர். மாணவர்களின் கல்வியை உயர்த்த அரும்பாடுபட்டு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதை கவனத்தில் கொண்டு தங்களது குழந்தைகள் படிக்க உதவி செய்ய வேண்டும் என்று பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். முருகராஜ் மருத்துவ படிப்புக்கு ஆகும் புத்தகசெலவை தான் ஏற்பதாக தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ உறுதியளித்துள்ளார்.

The post ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன், மகளுக்கு மருத்துவ சீட்: அரசு உதவி கேட்டு பெற்றோர் காத்திருப்பு appeared first on Dinakaran.

Tags : Sankarankovil ,MBBS ,
× RELATED குடிநீர், சாலை வசதி இல்லை எனக்கூறி தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்