×

2 நாள் ஓய்வுக்கு பின் பாதயாத்திரை அண்ணாமலைக்கு எதிர்ப்பு கருப்புக்கொடி, கடையடைப்பு: ஆட்டுக்குட்டியை பரிசாக கொடுத்த பாஜவினர்

திருச்சுழி: இரண்டு நாள் ஓய்வுக்கு பிறகு பாத யாத்திரையை துவக்கிய அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் கருப்புக்கொடி, கடையடைப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பாஜ மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற பாத யாத்திரையை ராமேஸ்வரத்தில் துவக்கினார். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களில் நடைபயணம் சென்றவர், ஆக. 6ம் தேதி மதுரை திருமங்கலத்தில் யாத்திரை மேற்கொண்டிருந்தபோது, திடீரென நிறுத்திவிட்டு சென்னை கிளம்பி சென்றார்.

2 நாள் ஓய்வுக்குப்பின் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு நேற்று காலை 9 மணிக்கு அண்ணாமலை மீண்டும் பாத யாத்திரையை தொடங்கினார். காரியாபட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே பேசிக்கொண்டிருந்தபோது, காரியாபட்டி மதிமுக நகரச்செயலாளர் மிசா சாமிக்கண்ணு, கருப்புக்கொடி காட்ட முயன்றார். போலீசார் உடனடியாக கருப்புக்கொடியை பறித்து வேனில் ஏற்றிச்சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

சுமார் 1 கிமீ தூரமே நடந்துவிட்டு அண்ணாமலை சொகுசு வாகனத்தில் கிளம்பிச் சென்றார். ஏற்கனவே, ‘நடைபயணமா, சொகுசு பஸ் பயணமா’ என்று அண்ணாமலையின் யாத்திரை மீது விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்திலும் அண்ணாமலை அதே பாணியில் யாத்திரை மேற்கொண்டதால் பாஜவினர் அதிருப்தியடைந்தனர். அருப்புக்கோட்டையில் நேற்று மாலை யாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை, பாலையம்பட்டியில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றார்.

அப்போது, அப்பகுதி மக்கள், ‘‘எங்கள் சமுதாயத்தில் ஒன்றரை கோடி பேர் இருக்கிறோம். எங்களை பாஜ மதிப்பதில்லை. எங்கள் தலைவரையும் மதிப்பதில்லை. இப்போது எதற்கு மாலை அணிவிக்க வந்தீர்கள்?’’ என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடும் வாக்குவாதத்துக்குப்பின் அவரை அனுமதித்தனர். மதுரை ரோட்டில் அண்ணாமலை யாத்திரை சென்றபோது, பாஜவை சேர்ந்த ஒருவர் ஆட்டுக்குட்டி பரிசளித்தார். அண்ணாமலை யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இஸ்லாமியர்கள் முழுமையாக கடைகளை அடைத்தனர்.

* பத்திரிகையாளர்களை தள்ளிவிட்ட கட்சியினர்
அண்ணாமலை நேற்று பகல் 12 மணிக்கு மேல் திருச்சுழி பூமிநாதர் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு விவசாய சங்கத்தினரை தனியார் மண்டபத்தில் சந்தித்தார். அப்போது மண்டபத்திற்குள் அனுமதியில்லை என கூறி பத்திரிகையாளர்களை, பாஜவினர் தள்ளி விட்டனர். இதனால் இருதரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பத்திரிகையாளர்கள் சிலர் அண்ணாமலையின் நிகழ்ச்சியை புறக்கணித்து சென்றனர்.

The post 2 நாள் ஓய்வுக்கு பின் பாதயாத்திரை அண்ணாமலைக்கு எதிர்ப்பு கருப்புக்கொடி, கடையடைப்பு: ஆட்டுக்குட்டியை பரிசாக கொடுத்த பாஜவினர் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,BJP ,Thiruchuzhi ,
× RELATED பொய் பேசும் ஒவ்வொரு முறையும் வழக்கு...