×

மணிப்பூரில் பாரத மாதாவை கொன்றுவிட்டீர்கள் நீங்கள் தேசபக்தர்கள் அல்ல, தேச துரோகிகள்: மோடி அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ராகுல் ஆவேச பேச்சு

புதுடெல்லி: மக்களவையில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘‘பாஜவின் அரசியல் மணிப்பூரில் பாரத மாதாவை கொன்று விட்டது. நீங்கள் தேச பக்தர்கள் அல்ல, தேச துரோகிகள்’’ என சரமாரியாக குற்றம்சாட்டி அனல் தெறிக்க பேசினார். மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மை இனத்தவர்களான மெய்டீஸ் மக்களுக்கும், பழங்குடியினர்களான குக்கி சமூகத்தினருக்கும் இடையேயான இனக்கலவரம் 3 மாதமாக நீடிக்கிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை பேச வைப்பதற்காக, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் மக்களவையில் ஒன்றிய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மீதான விவாதம் நேற்று முன்தினம் தொடங்கியது. விவாதத்தை தொடங்கிய மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவர் கவுரவ் கோகாய், மணிப்பூர் விவகாரத்தில் பிரதமரின் மவுனம் குறித்து சரமாரி கேள்வி எழுப்பினார்.

இதைத் தொடர்ந்து, விவாதத்தின் 2ம் நாளான நேற்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும், கடந்த 1942ம் ஆண்டு மகாத்மா காந்தியால் முன்னெடுக்கப்பட்ட ’வெள்ளையனே வெளியேறு’ இயக்க தினத்தையொட்டி சுதந்திர போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கும், ஜப்பானின் ஹிரோஷிமா நாகசாகி மீது வீசப்பட்ட அணுகுண்டுக்கு பலியான அப்பாவி பொதுமக்களுக்கும் அவை உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி அவைக்கு வராததை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அமளிக்கு இடையே 45 நிமிடம் கேள்வி நேரம் நடந்தது. பின்னர் அமளி காரணமாக 15 நிமிடம் அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 12 மணிக்கு அவை மீண்டும் கூடியதும், நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது.

இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசியதாவது: மூன்று மாதங்களுக்கும் மேலாக மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அப்பாவி மக்கள் பலியாகி உள்ளனர். ஆனால் பிரதமர் மோடி ஏன் அங்கு செல்லவில்லை. இப்போது வரையிலும் அவர் அங்கு செல்லவில்லை. அந்த மாநிலத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி கருதவில்லை. சில நாட்களுக்கு முன்பு நான் மணிப்பூர் சென்றிருந்தேன். மணிப்பூர் என நான் ஒரே சொல்லாக செல்கிறேன். ஆனால் அந்த மாநிலம் ஒன்றாக இல்லை என்பதுதான் உண்மை. நீங்கள் (பாஜ அரசு) அதை இரண்டாக பிரித்து விட்டீர்கள். மணிப்பூரை உடைத்து விட்டீர்கள்.

அங்குள்ள முகாம்களுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தேன். நிர்கதியில்லாமல் தவிக்கும் பெண்கள், குழந்தைகளிடம் பேசினேன். ஆனால் பிரதமர் மோடி அவ்வாறு செய்யவில்லை. அங்குள்ள ஒரு பெண்மணியிடம், ‘‘உங்களுக்கு என்ன நேர்ந்தது?’’ என கேட்டேன். அதற்கு அவர், ‘‘எனது ஒரே மகன், என்னுடைய அந்த குழந்தையை என் கண் எதிரிலேயே சுட்டுக் கொன்றார்கள். என் குழந்தையின் சடலத்தின் முன்னே இரவு முழுவதும்
அமர்ந்திருந்தேன். கலவரம் நீடித்ததால், அதன் பின் எனக்கு பயம் வந்து விட்டது.

எனது வீட்டை விட்டு தப்பி ஓடி வந்தேன்’’ என்றார். ‘வீட்டை விட்டு வரும் போது எதாவது எடுத்து வந்தீர்களா?’ என கேட்டேன். அதற்கு அந்த பெண்மணி, ‘‘கட்டிய உடையுடன் ஒரே ஒரு போட்டோவை மட்டும் எடுத்து வந்தேன்’’ என்றார். மற்றொரு முகாமில் உள்ள இன்னொரு பெண்ணிடமும் இதே கேள்வியை கேட்டேன். அவர் பதில் சொல்ல தொடங்குவதற்குள்ளேயே நடுங்கி மயக்கமடைந்தார். இந்த இரண்டு சம்பவமும் சிறிய எடுத்துக்காட்டுதான். மணிப்பூரில் நீங்கள் (பாஜ) இந்தியாவை கொன்றுவிட்டீர்கள். உங்களின் அரசியல் மணிப்பூரைக் கொல்லவில்லை, மணிப்பூரில் இந்தியாவைக் கொன்று விட்டது.

மணிப்பூரில் இந்தியா படுகொலை செய்யப்பட்டுள்ளது. மணிப்பூர் மக்களைக் கொன்றதன் மூலம் நீங்கள் பாரதத்தைக் கொன்றீர்கள். இந்தியாவின் குரலை கொன்று விட்டீர்கள். எனது தாய் இங்கே அமர்ந்திருக்கிறார், இன்னொரு தாய், பாரத தாயை நீங்கள் மணிப்பூரில் கொன்று விட்டீர்கள். இன்னமும் கலவரத்தை அடக்காமல், பாரத மாதாவை கொன்று கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் தேச பக்தர்கள் அல்ல, தேச துரோகிகள். நீங்கள் எல்லா இடத்திலும் மண்ணெண்ணெயை தெளித்துவிட்டீர்கள். மணிப்பூருக்கு தீ வைத்தீர்கள் இப்போது அரியானாவிலும் அதையே முயற்சி செய்கிறீர்கள்.

ராணுவத்தினால் மட்டுமே மணிப்பூரில் அமைதியை கொண்டுவர முடியும். ஆனால் அங்கு ராணுவத்தை ஒன்றிய அரசு அனுப்ப மறுக்கிறது. ராவணன் மேகநாதன் மற்றும் கும்பகர்ணன் ஆகிய இருவருக்கு மட்டும் செவிசாய்த்தது போல், அமித் ஷா மற்றும் கவுதம் அதானி ஆகிய இருவரின் பேச்சை மட்டுமே பிரதமர் மோடி கேட்கிறார். இலங்கையை எரித்தது அனுமன் கிடையாது. ராவணனின் ஆணவம் தான் இலங்கையை எரித்தது. ராவணைனை ராமன் கொல்லவில்லை. ஆணவம் தான் ராவணனின் அழிவுக்கு காரணம்.

பிரதமர் மோடி இந்தியாவின் குரலை கேட்பதற்கு பதிலாக அதானியின் குரலை மட்டும்தான் கேட்கிறார். இந்த நாட்டின், மக்களின் குரல், அவர்களின் வலி, பிரச்னைகளை கேளுங்கள். மக்களின் குரலை கேட்டால், ஆணவத்திற்கும், அகங்காரத்திற்கும், வெறுப்பிற்கும் உங்களால் முடிவு கட்ட முடியும். இவ்வாறு ராகுல் காந்தி அனல் தெறிக்க பேசினார். அவரது சரமாரி குற்றச்சாட்டுக்கு பல இடங்களில் ஆளும் பாஜ எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆவேசமாக கோஷமிட்டனர். இதனால் அவையில் பெரும் பரபரப்பு நிலவியது. ராகுலை தொடர்ந்து மணிப்பூர் விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, அமித்ஷா ஆகியோர் நேற்று பதிலளித்து பேசினர். இதைத் தொடர்ந்து, இன்று எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளித்த பின், நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும்.

* சிறை செல்லவும் தயார்
இந்திய ஒற்றுமை நடைபயணம் குறித்து பேசிய ராகுல் காந்தி, ‘‘நான் கன்னியாகுமரியின் கடல் முனையில் இருந்து பனி மலைகள் கொண்ட காஷ்மீர் வரை நாட்டின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனை வரை நடைபயணம் மேற்கொண்டேன். நான் பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்கியதும் சிலர் கேட்டார்கள், ‘எதற்காக நீங்கள் நடக்கிறீர்கள்? உங்கள் நோக்கம் என்ன?’ என்றார்கள். ஏன் நான் நடக்கிறேன் என எனக்கு முதலில் தெரியவில்லை. ஆனால் விரைவிலேயே புரிந்து கொண்டேன். யாத்திரைக்காக அனைத்தையும் தியாகம் செய்ய தயாராக இருந்தேன். இந்த யாத்திரையில் உண்மையான இந்தியாவை பார்த்தேன். மக்கள் எனக்கு நிறைய உதவிகள் செய்தனர். ஏழைகளின் வேதனையை உணர்ந்தேன். நான் நேசிக்கின்ற மக்களுக்காக சாகவும் தயாராக இருக்கிறேன். பிரதமர் மோடி விரும்பினால் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கின்றேன். கடந்த 10 ஆண்டுகளில் நான் மிகவும் அலைக்கழிக்கப்பட்டுள்ளேன். எனது இந்த யாத்திரை இன்னும் முடியவில்லை’’ என்றார்.

* திடீரென வந்த ராகுல்
ராகுல் காந்தி நேற்று முன்தினம் விவாதத்தை ஏன் தொடங்கி வைக்கவில்லை, கடைசி நிமிடத்தில் அவர் பேசுவது ஏன் மாற்றப்பட்டது என பாஜ எம்பிக்கள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், ராகுல் நேற்று ராஜஸ்தான் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. இதனால் நேற்றும் அவர் விவாதத்தில் பங்கேற்க மாட்டார் என காலை 11 மணி அளவில் தகவல்கள் வெளியாகி வந்தன. பின்னர் திடீரென பகல் 12 மணி அளவில் அவைக்கு வந்த ராகுல் விவாதத்தில் பங்கேற்றார்.

* மோடி ஆப்சென்ட்
நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் கொளுந்து விட்டு எரிவதால் பிரதமர் மோடி அவைக்கு வருவதையே தவிர்த்து வருகிறார். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடப்பதால் நேற்று முன்தினம் அவர் அவைக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வரவில்லை. விவாதத்தின் 2ம் நாளான நேற்றும் பிரதமர் மோடி அவைக்கு வரவில்லை.

* ராகுலுக்கு பதிலாக சபாநாயகரை காட்டிய நாடாளுமன்ற டிவி
ராகுல் அவையில் பேசும் போது, சன்சாத் டிவியில் அவரை இருட்டடிப்பு செய்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டரில், ‘‘ராகுல் காந்தி பிற்பகல் 12:09 மணிக்கு பேசத் தொடங்கி 12:46 வரை பேசினார். அவரது 37 நிமிட பேச்சில், சன்சாத் சேனலில் வெறும் 14 நிமிடங்கள் மட்டுமே ராகுல் காட்டப்பட்டார். இதில் 11 நிமிடம் 8 விநாடிகள் சபாநாயகரின் முகம் தான் சேனலில் காட்டப்பட்டது. மோடி பயப்படுகிறாரா?’’ என கூறி உள்ளார்.

* வேடிக்கை பார்த்த இரட்டை இன்ஜின்: கனிமொழி
மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் திமுக எம்பி கனிமொழி பேசுகையில், ‘‘மணிப்பூரில் வீடுகள் எரிக்கப்படுவதையும், ஆயுதங்கள் சூறையாடப்படுவதையும், மக்கள் ஒருவரையொருவர் கொன்றதையும், பெண்கள் அவமானப்படுத்தப்படுவதையும், நிர்வாணமாக அணிவகுத்துச் செல்வதையும், அத்துமீறுவதையும் பிரதமர் மோடியும், ஒன்றிய அரசும், செயல்படாத மணிப்பூர் மாநில அரசும் மவுனமாக பார்த்துக் கொண்டிருக்கிறது. இரட்டை இன்ஜின் கைகட்டி வேடிக்கை பார்த்துவிட்டு, ‘சகோதரர்கள் சண்டையிடுகிறார்கள்’ என்கின்றனர். ஒரு மாநிலத்தைப் பாதுகாக்க நீதித்துறை தலையிடுவது இந்தியாவில் இதுவே முதல் முறை’’ என்றார்.

* ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்
பாஜவினரை தேச துரோகிகள் என ராகுல் பேசியதும், பாஜ எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ‘வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சி மற்றும் பிற பிரச்னைகளுக்கு காங்கிரஸ் தான் காரணம். எனவே ராகுல் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்’ என ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ உள்ளிட்டோர் கோஷமிட்டனர்.

* செம்ம டிவிஸ்ட்
விவாதத்தில் ராகுல் பேச்சை தொடங்கியதும், ‘‘நான் இன்று எனது இதயத்தில் இருந்து பேச விரும்புகிறேன். எனவே எப்போதும் போல அரசின் மீது தாக்குதல் தொடுக்க மாட்டேன். எனவே பாஜ நண்பர்களே நீங்கள் பயப்பட தேவையில்லை. எனது இன்றைய பேச்சு உங்களை குறிவைக்காது. ‘இதயத்தில் இருந்து வரும் வார்த்தைகள் இதயத்திற்குள் செல்கின்றன’ என ருமி (பாரசீக கவிஞர்) கூறியிருக்கிறார். எனவே உங்களை அதிகம் தாக்கி பேச மாட்டேன்’’ என கூறிவிட்டு, வெளுத்து வாங்கி விட்டார்.

* மாநிலங்களவை எம்பிக்களும் ஆர்வம்
மக்களவையில் ராகுல் பேசும் தகவலை அறிந்ததும், மாநிலங்களவையை சேர்ந்த எம்பிக்கள் பலரும் அவரது பேச்சை கேட்க ஆர்வமாக மக்களவைக்கு வந்தனர். மாநிலங்களவைச் சேர்ந்த பல எம்பிக்களை மக்களவை பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து ராகுலின் பேச்சை கடைசி வரை கேட்டுச் சென்றனர்.

* சபாநாயகரையும் விட்டு வைக்கவில்லை
பாஜ எம்பிக்களை மட்டுமல்ல, சபாநாயகர் ஓம் பிர்லாவையும் ராகுல் விட்டு வைக்கவில்லை. தனது பேச்சை தொடங்கிய ராகுல், ‘‘தகுதி நீக்க உத்தரவை வாபஸ் பெற்று எனக்கு மீண்டும் எம்பி பதவியை கொடுத்ததற்காக சபாநாயகருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடைசியாக (2018ம் ஆண்டில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்) நான் பேசிய போது, உங்களுக்கு (சபாநாயகர்) வலியை ஏற்படுத்தினேன். அப்போது அதானி விவகாரம் குறித்து கவனம் செலுத்தினேன். அது உங்களின் மூத்த தலைவர்களுக்கு வலியை கொடுத்திருக்கும். அந்த வலி உங்களையும் பாதித்திருக்கும். அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’’ என கூறி பேச்சை தொடங்கினார்.

The post மணிப்பூரில் பாரத மாதாவை கொன்றுவிட்டீர்கள் நீங்கள் தேசபக்தர்கள் அல்ல, தேச துரோகிகள்: மோடி அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ராகுல் ஆவேச பேச்சு appeared first on Dinakaran.

Tags : Rahul ,Parliament ,Modi government ,New Delhi ,Congress ,Rahul Gandhi ,Baja ,Bharatha ,Manipur ,Dinakaran ,
× RELATED யாரும் ஓட்டு போட கூடாது; ராகுல்...