×

கீழடி 9ம் கட்ட அகழாய்வில் சுடுமண் பாம்பு தலை கண்டெடுப்பு

திருப்புவனம்: கீழடியில் நடந்து வரும் 9ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணாலான பாம்பின் தலையை கண்டெடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணி, தொல்லியல் துறை ஆணையாளர் சிவானந்தம் தலைமையில் நடந்து வருகிறது. இணை இயக்குனர் ரமேஷ், தொல்லியல் ஆய்வாளர்கள் அஜய், காவ்யா மற்றும் தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

9ம் கட்ட அகழாய்வில் வீரணன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில், 9 குழிகள் தோண்டப்பட்டு இதுவரை 183 பொருட்களை கண்டறிந்துள்ளனர். இந்நிலையில், 9வது குழியில் நேற்று முன்தினம் நடந்த அகழாய்வில் 8 கிராம் எடையில், 1.5 செ.மீ உயரம் கொண்ட ஸ்படிக எடைக்கல்லை கண்டெடுத்தனர். இதனுடன் இரும்பாலான ஆணி, கருப்பு, சிவப்பு பானை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டன. இந்த நிலையில், இதுவரை கண்டெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பானை ஓடுகளை வகைப்படுத்தும் பணி நேற்று நடைபெற்றது.

அப்போது, சுடுமண்ணால் வனையப்பட்ட பாம்பின் தலைப் பகுதி உடைந்த நிலையில் கிடைத்தது. இது குறித்து தொல்லியல் துறை ஆணையாளர் சிவானந்தம் கூறுகையில், ‘பானை ஓடுகளை வகைப்படுத்தும் பணியில் ஈடுபட்டபோது, சுடுமண் பாம்பின் தலைப்பகுதி கிடைத்தது. இதில், பாம்பின் கண்கள், வாய்ப்பகுதி மிக நேர்த்தியாக வனையப்பட்டுள்ளது.

இது 6.5 செமீ நீளம், 5.4 செமீ அகலம் 1.5 செமீ தடிமண் கொண்டதாக உள்ளது’ என்றார். கீழடியில் ஸ்படிக எடைக்கல், பாம்பின் தலைப்பகுதி உள்ளிட்ட அரிய தொல்லியல் பொருட்கள் கிடைத்து வருவதால், அகழாய்வு குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post கீழடி 9ம் கட்ட அகழாய்வில் சுடுமண் பாம்பு தலை கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Sivagangai District ,Tirupuvanam ,Dinakaran ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி...