×

சுற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

சென்னை: சுற்றுலா மேம்பாட்டுத் திட்டப்பணிகள் அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும்போது, சுற்றுலா பயணிகளுக்கு புதுப்புது அனுபவங்கள் கிடைப்பதுடன், உள்ளூர் மக்களின் பொருளாதாரம் மேம்பாடு அடையும் என சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவர் க.மணிவாசன், சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, ஆகியோர் முன்னிலையில் இன்று (09.08.2023) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் பேசுகையில் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைகளால் இந்தியாவிலேயே தமிழ்நாடு அதிக அளவில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முதன்மை மாநிலமாக முன்னேறி உள்ளது. தமிழ்நாட்டிற்கு ஆண்டு முழுவதும் அதிக சுற்றுலா பயணிகள் வருகை தரும் வகையில் முதலமைச்சரால் பல்வேறு சுற்றுலா வளர்ச்சித்திட்டப் பணிகளை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள்.

சுற்றுலா பயணிகள் மற்றும் இளைஞர்களுக்கு சாகச அனுபவங்களை தரும் வகையில் ஊட்டி, தருமபுரி மாவட்டம் வத்தல்மலை, ஏலகிரி மலை உள்ளிட்ட பகுதிகளில் சாகச சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பழம்பெருமை வாய்ந்த துறைமுக நகரான பூம்புகார் (காவிரிபூம்பட்டினம் பழைய பெயர்) நகரத்தில் பூம்புகார் கலைக்கூடத்தில் புனரமைப்பு பணிகள் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஓகேனக்கல், பிச்சாவரம் ஆகிய சுற்றுலாத்தலங்களில் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தும் வகையில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிஅரித்ரா நதி தெப்பக்குளம், ஈரோடு மாவட்டம் அந்தியூர் பெரிய ஏரி ஆகிய இடங்களில் படகு குழாம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

முட்டுக்காடு படகு குழாமில் 200 நபர்கள் அமரும் வகையிலான இரண்டு அடுக்குகள் கொண்ட மிதவை உணவக கப்பல் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் படகுகுழாம்கள் அமைத்தல் உள்ளிட்ட சுற்றுலா மேம்பாட்டுத் திட்டப்பணிகள் அறிவிக்கப்பட்டு அதனை செயல்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

சுற்றுலா தலங்களில் வளர்ச்சித்திட்டப்பணிகளை மேற்கொள்ளும்போது வாகன நிறுத்தும் இடம், சுகாதார வளாகம் அமைத்தல் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பணிகள் குறித்த காலத்திற்குள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் சுற்றுலா அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும். அறிவிக்கப்பட்டுள்ள சுற்றுலா திட்டப்பணிகள் அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் விரைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

சுற்றுலா மேம்பாட்டுத் திட்டப்பணிகள் அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும்போது, சுற்றுலா பயணிகளுக்கு புதுப்புது அனுபவங்கள் கிடைப்பதுடன், உள்ளூர் மக்களின் பொருளாதாரம் மேம்பாடு அடையும் என்று மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுருத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொதுமேலாளர் லி.பாரதிதேவி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக திட்ட பொறியாளர், உதவி செயற்பொறியாளர்கள் சுற்றுலாத்துறை உயர் அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post சுற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Minister Ramachandran ,Chennai ,Minister ,Ramachandran ,Tourism Department ,
× RELATED தனியார் நிறுவன நிர்வாகிக்கு கொலை...