×

ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள வேண்டும்!

நன்றி குங்குமம் தோழி

சென்னை ஆவடியை சேர்ந்தவர் தமிழினி. ஏழாம் வகுப்பு படித்து வரும் தமிழினி அந்த வயதிற்கான சுட்டித்தனம் இருந்தாலும், யோகாசன போட்டியில் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு கோப்பைகளையும் பரிசுகளையும் அள்ளி வருகிறார். மாவட்ட, மாநிலம் மற்றும் தேசிய அளவில் மட்டுமல்ல ஆசியா அளவில் நடைபெறும் போட்டிகளிலும் கலந்து கொண்டு பதக்கங்களையும், பரிசுகளையும் பெற்றிருக்கிறார். எந்த ஒரு பெரிய பின்புலம் இன்றி தனக்கென தனிப்பாதை வகுத்து சாதித்து வருகிறாள் இந்த பதின்ம வயது சிறுமி. யார் இந்த தமிழினி..? இந்த சிறு வயதில் யோகாவில் எப்படி ஆர்வம் வந்தது என அவளிடமே கேட்டோம்…

‘‘எனக்கு மூன்று வயதிலேயே வீசிங் பிராப்ளம் இருந்தது. பலரும் எனது அப்பாவிடம் என்னை யோகா வகுப்பில் சேர்த்து விட சொன்னார்கள். எனது வீசிங் பிரச்னைக் காக எனது பெற்றோர்கள் என்னை மூன்று வயதில் யோகா வகுப்பில் சேர்த்து விட்டார்கள். அங்கு எனது யோகா ஆசிரியர் விஜய மோகன் மற்றும் தேஜா ஆகியோர் எனக்கு எளிய ஆசனங்களை கற்றுத் தந்தனர். அப்படித் தான் யோகாவை நான் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.

நான் எனது யோகா ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்த ஆசனங்களை மிக எளிதாக கற்றுக் கொண்டதை பார்த்து எனக்கு தொடர்ந்து பல ஆசனங்களை கற்றுக் கொடுத்து யோகா போட்டிகளில் பங்கேற்க செய்ய வேண்டும் என என் யோகா ஆசிரியர் விரும்பினார். அதனை எனது பெற்றோரிடம் தெரிவித்தபோது அவர்களும் முழுமனதுடன் ஏற்று என்னை போட்டிகளில் பங்கேற்க ஊக்குவித்தார்கள். மேலும் தொடர்ந்து யோகா செய்ததின் பலனாக எனது வீசிங் பிரச்னையும் முழுவதும் சரியாகி விட்டது. எனது யோகா ஆசிரியர்களும் பெற்றோரும் அளித்த ஊக்கமே என்னை சர்வதேச யோகா போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பினை ஏற்படுத்தி கலந்து கொள்ள செய்தது. அதில் பல்வேறு பரிசுகளையும் கோப்பைகளையும் பெற்று வந்ததில் எனக்கும் எனது பெற்றோருக்கும் யோகா ஆசிரியர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி’’ என்கிறார் குட்டிப் பெண் தமிழினி.

‘‘நான் இதுவரை 120 மெடல்களையும் பரிசுகள் மற்றும் விருதுகளையும் வாங்கியுள்ளேன். மேலும் யோகா இளவரசி, யோகா நட்சத்திரா, தங்கத் தாரகை என மூன்று விருதுகளையும் பெற்றிருக்கிறேன். மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் பங்கு பெற்று பதக்கங்களை பெற்றுள்ளேன். கடந்த சில மாதங்களுக்கு முன் பஞ்சாப்பில் நடந்த யோகா போட்டியில் 5வது இடத்தை பிடித்தேன். அதேபோல் போபாலில் நடந்த யோகா போட்டியில் 3வது இடத்தை பிடித்தேன்.

மற்ற அனைத்து விளையாட்டு போட்டிகளும் ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற்று இருக்கிறது. யோகாசனம் மட்டும் அதில் இடம் பெறவில்லை. யோகாவையும் ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்க வேண்டும் என்பது எனது ஆசை. அதில் நான் இந்தியா சார்பில் கலந்து கொண்டு பல பதக்கங்களை அள்ளி வரவேண்டும் என்பது என்னுடைய மிகப்பெரிய லட்சியம். ஒலிம்பிக்கில் யோகாசன போட்டி இடம் பெறும் வகையில் பல போட்டிகளில் பங்கு பெற்று பதக்கங்களை அள்ள வேண்டும்’’ என்றவர், ஆசியா அளவில் நடைபெற்ற யோகா
போட்டியில் பங்கு பெற்ற அனுபவம் குறித்து பகிர்ந்தார்.

‘‘ஆசியப் போட்டிகளில் பங்கு பெற்று சௌத் இந்தியாவில் நடந்த போட்டிகளில் சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டத்தினை ஆறு முறை வாங்கி இருக்கிறேன். மேலும் அதே போட்டிகளில் பங்கு பெற்று ஆறு முறை ரன்னராகவும் வந்திருக்கிறேன். கொரோனா காலத்தில் ஆசியா அளவிலான யோகா போட்டி ஆன்லைனில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு சாம்பியன் ஆப் சாம்பியன் வென்றேன்.நான் எனது மேற்படிப்பில் கூட யோகா சம்பந்தப்பட்ட படிப்பினை படிக்க விரும்புகிறேன். வருங்காலத்தில் யோகா பயிற்சியாளராக வேண்டும். எனக்கு தெரிந்த இந்த அற்புதக் கலையினை பலருக்கு சொல்லித்தர வேண்டும். மேலும் யோகா குறித்த நன்மைகளைப் பற்றி மக்களுக்கு புரிய வைத்து அவர்களுக்கு அதனால் ஏற்படும் உடல் சார்ந்த ஆரோக்கியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’’ என்றார் தமிழினி.

தொகுப்பு : தனுஜா ஜெயராமன்

The post ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள வேண்டும்! appeared first on Dinakaran.

Tags : Olympics ,Tamilini ,Avadi, Chennai ,
× RELATED பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம்...