×

3வது டி.20 போட்டியில் இந்தியா அபார வெற்றி: சவால்களை விரும்பும் சூர்யா அணியில் இருப்பது எனது அதிர்ஷ்டம்: கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டி

கயானா: இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் இடையே 5 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் முதல் 2 போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் வெற்றிபெற்ற நிலையில் 3வது டி.20 போட்டி நேற்றிரவு கயானாவில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த வெஸ்ட்இண்டீஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன் எடுத்தது. அதிகபட்சமாக பிராண்டன் கிங் 42 ரன்(42 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்),கேப்டன் ரோவ்மேன் பவெல் நாட்அவுட்டாக 40 ரன் (19 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்), கைல் மேயர்ஸ் 25, பூரன் 20 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 3, அக்சர் பட்டேல், முகேஷ்குமார் 1 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் களம் இறங்கிய இந்திய அணியில் அறிமுக வீரர் ஜெய்ஸ்வால் 1, சுப்மன் கில் 6 ரன்னில் வெளியேற சூர்யகுமார் யாதவ் 23 பந்தில் 14வது அரைசதத்தை அடித்தார். அவர் 83 ரன் (44 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்)அவுட் ஆனார். 17.5 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 164 ரன் எடுத்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. திலக் வர்மா 49 (37 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஹர்திக் பாண்டியா 20 ரன்னில் (15 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர்.

போட்டிக்கு பின் இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியதாவது: “இந்த வெற்றி மிகவும் முக்கியமானது. நாங்கள் எங்களை மீட்டுக் கொள்ள வேண்டியதாக இருந்தது. 2 தோல்வி அல்லது 2 வெற்றி எங்களை எதுவும் செய்யாது. எங்களிடம் ஒரு நீண்ட காலத்திட்டம் இருக்கிறது. சுழற் பந்துவீச்சாளர்கள் குறித்து எந்தத் திட்டமும் கிடையாது. பூரன் பேட்டிங் செய்ய வருவதற்குள் அவர்களை அதிகம் பயன்படுத்த நினைத்தோம். அக்சர் கடந்த போட்டியில் பந்து வீசவில்லை. அவர் முன்பே பந்து வீசினால் பின்னர் சாஹல் மற்றும் குல்தீப் இருப்பார்கள். இறுதியில் முகேஷ் மற்றும் அர்ஷ்தீப் சிறப்பாக முடித்தனர்.

பூரன் அடிக்க விரும்பினால் என் பந்துவீச்சை அடிக்கட்டும். எனக்கு இந்த மாதிரியான போட்டி பிடிக்கும். அதே சமயத்தில் நான் பந்துவீச்சில் லைன் மற்றும் லென்த்தில் தவறு செய்ய மாட்டேன் என்று எனக்கு தெரியும். இது உற்சாகமானதாக இருக்கிறது. அடுத்த போட்டியில் எனது பந்துவீச்சை அடிப்பார் என நினைக்கிறேன். எங்களுக்கு 8வது இடத்தில் பேட்ஸ்மேன் கிடையாது. அந்த இடத்தில் எங்களுக்கு ஒரு பந்துவீச்சாளர் இருக்கிறார். பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தை வென்று தருவார்கள்.

பேட்ஸ்மேன்கள் தங்கள் வேலையை ஒழுங்காகச் செய்தால் 8வது இடத்தில் ஒரு பேட்ஸ்மேனுக்கான தேவை இருக்காது. சூர்யா.திலக் இருவரும் புத்திசாலிகள். ஒன்றாக விளையாடுகிறார்கள். ஒருவரை ஒருவர் புரிந்து வைத்திருக்கிறார்கள். சூர்யாவைப் போல் சவால்களை விரும்பும் ஒருவரை கேப்டனாக நான் பெற்றிருப்பதில் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவன். மேலும் அவர் தாமாக பொறுப்புகளை ஏற்க விரும்புபவர். அவர் எங்கள் குழுவிற்குள் நிறைய நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்” என்றார். கடைசி 2 போட்டிகள் அமெரிக்காவின் லாடெர்ஹில்லில் நடக்கிறது. 4வது போட்டி வரும் 12ம்தேதி நடைபெற உள்ளது.

The post 3வது டி.20 போட்டியில் இந்தியா அபார வெற்றி: சவால்களை விரும்பும் சூர்யா அணியில் இருப்பது எனது அதிர்ஷ்டம்: கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டி appeared first on Dinakaran.

Tags : India ,T20I ,Suriya ,Captain Hardik Pandya ,Guyana ,West Indies ,Dinakaran ,
× RELATED இங்கிலாந்துக்கு எதிரான டி20 முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி