×

கிச்சன் சிங்க் பளிச்சிட சில டிப்ஸ்

சமையல் அறையில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் தண்ணீர்த் தொட்டியான சிங்க் பகுதியை சுத்தமாக பராமரித்தால் துர்நாற்றத்தையும், நோய்க் கிருமிகளின் தொற்றையும் தடுக்க முடியும். அதற்கான ஆலோசனைகள் இதோ.

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சிங்க்

இந்த வகை சிங்க்குகளில் கறை மற்றும் துருப்பிடிக்கும் வாய்ப்பு குறைவு. இருந்தாலும் அதில் நாம் கொட்டும் உணவுக் கழிவுகள் அதன் ஆயுளைக் குறைக்கக்கூடும். அமிலத் தன்மை நிறைந்த உணவுத் துணுக்குகளை அப்புறப்படுத்தாமல் சிங்க்கில் அதிக நேரம் விட்டு வைத்தால் ஸ்டீலின் தன்மை பாதிக்கப்படும்.ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் சிங்க்கை சுத்தம் செய்ய பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம். சிங்கில் இருந்து தண்ணீர் வெளியேறாதவாறு அதன் ஜல்லடைப் பகுதியை முதலில் அடைக்கவும். பின்னர் சிறிதளவு பேக்கிங் சோடா பாத்திரம் தேய்க்கும் திரவம் ஆகியவற்றை அதில் போட்டு கொதிக்கும் தண்ணீரை ஊற்றவும். பத்து நிமிடங்கள் கழித்து மென்மையான ஸ்கரப்பர் கொண்டு சிங்கை நன்றாக தேய்த்து சுத்தப்படுத்தவும். அதன் பின்பு உலர்ந்த மைக்ரோபைபர் துணியைக் கொண்டு அதை நன்றாகத் துடைத்து உலர்த்த வேண்டும்.

வெள்ளை நிற சிங்க்

வெள்ளை சிங்க் ெபாருத்தப்பட்ட சமையல் அறை பார்க்க அழகாக இருக்கும். ஆனால் காபி, மசாலா போன்ற கறைகள் படிந்தால் அதன் அழகு எளிதில் பாதிப்படையும். இந்த வகையான சிங்க்கை சுத்தம் செய்யும் முன்பு பருத்தித் துணியை தண்ணீரில் நனைத்து சிங்க்கின் உள்பகுதியில் போட வேண்டும். பின்னர் அதை முழுவதுமாக மூடியவாறு பேக்கிங் சோடாவைத் தூவ வேண்டும். பின்பு அதில் சில துளிகள் ஹைட்ரஜன் பெராக்ஸைடு தெளிக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து சிங்க்கை ஸ்பாஞ்ச் கொண்டு தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். பின்பு தண்ணீர் ஊற்றி முழுவதுமாக சுத்தம் செய்து உலர்த்தி துணியால் நன்றாக துடைக்க வேண்டும்.

பீங்கான் சிங்க்

வெள்ளை சிங்க்கை போலவே இதையும் சுத்தம் செய்ய முடியும். இதில் துருவும், கறையும் எளிதில் படிய வாய்ப்புள்ளது. எலுமிச்சை பழச்சாறு மற்றும் உப்பைக் கலந்து பீங்கான் சிங்கில் தெளித்து
ஸ்க்ரப்பரால் தேய்த்தால் கறை அகலும். தினமும் பாத்திரம் துலக்கிய பின் வெது வெதுப்பான சோப்புநீரில் சிங்கை சுத்தம் செய்து மைக்ரோபைபர் துணியால் துடைக்க வேண்டும்.

சாதாரண கடப்பா கல் அல்லது சிமெண்ட் சிங்க்

பொதுவாகவே ஒரு மேற்பூச்சுப் போல் அழுக்கு படியும் வாய்ப்பும், பூஞ்சைகள் குடியேறும் வாய்ப்பும் இந்த சிங்கில் அதிகம் நிகழும். அதிகம் நீர் தேங்காதவாறு வைத்துக்கொள்ளுங்கள். போலவே இந்த வகை சிங்க் தினந்தோறும் சிங்க் பிரஷ் கொண்டு அழுத்தித் தேய்த்து சுத்தப்படுத்துவது நல்லது. தரைகள் துடைக்கும் கிளீனர் திரவம் கொண்டும் இந்த சிங்கை ஊற வைத்துத் துடைக்கலாம். பேக்கிங் சோடா உடன் சோப்புக் கொண்டு மாதம் ஒரு முறையும், தினம் பாத்திரம் தேய்த்த மறுகணம் அதே பாத்திரம் கழுவும் சோப் அல்லது பவுடர் கொண்டு பிரஷ்ஷால் நன்கு அழுத்தித் தேய்த்தாலே இந்த வகை சிங்க் காலம் தாண்டி நிற்கும். இதில் உப்பு நீர் கறை படியும் வாய்ப்பும் இருப்பதால் தினம் தினம் சுத்தம் அவசியம்.

சிங்க் குழாய் அடைப்பு

கூடுமானவரை சல்லடை மூடிக் கொண்டு நன்கு அடைத்துவிட்டு பாத்திரம் துலக்குங்கள். டீத்தூள் கசடுகளைக் கூட உள்ளே போடக் கூடாது என்பதில் உறுதியாக இருங்கள். வீட்டில் இருப்போருக்கும் கண்டிப்பான முறையில் சொல்லிவிடுங்கள். ஏதேனும் அடைத்துக்கொண்டால் எடுத்த எடுப்பிலேயே நிபுணர்களை அழைக்க வேண்டியதில்லை, துடப்பம் குச்சி, அல்லது கம்பி கொண்டு லேசாக குத்திப் பார்க்கலாம். இல்லையேல் கடைகளில் சிங்க் கிளீனிங் பவுடர் விற்கும், அதனைக் கொண்டும் சுத்தம் செய்யலாம். இரண்டொரு நாட்களுக்கு ஒரு முறை சிங்க்கில் நிறைய நீரைப் பாய்ச்சி அடித்து சுத்தம் செய்வது நல்லது. ஒருவேளை என்ன முயற்சித்தும் அடைப்பு சரியாகவில்லை எனில் உடனடியாக பிளம்பர் அழைப்பது நல்லது.

– அ.ப. ஜெயபால்

The post கிச்சன் சிங்க் பளிச்சிட சில டிப்ஸ் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED எந்தக் கிரகம் நல்லது செய்யும்?