×

2023 ன் மிஸ் தமிழ்நாடு!

எனக்கு முன்னாடியே என் தம்பிதான் படு ஃபேமஸ். ஆமா ‘மெர்சல்’ படத்திலே விஜய் சாருக்கு பையனா பட்டை அடிச்சிட்டு நடிச்சிருப்பானே அக்‌ஷத் தாஸ், அவன் என் குட்டித் தம்பி’… ஆரம்பமே அடடே சொல்ல வைக்கிறார் ‘மிஸ் தமிழ்நாடு 2023’ பட்டம் பெற்ற அக்‌ஷதா தாஸ்.

‘உங்களைப் பற்றி சொல்லுங்க?

‘ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி இந்தக் கேள்வி கேட்டிருந்தா, செம படிப்ஸ் பொண்ணு, ஒரு அகாடமிக் இன்ஜினியரிங் படிக்கற பொண்ணுன்னு சொல்லியிருப்பேன். ஆனால் இப்போ சூழல் மொத்தமா வேறு. பேசிக்கலி மலையாளி, ஆனால் குடும்பமா ரொம்ப வருடங்களுக்கு முன்னாடியே சென்னையிலே செட்டில் ஆகிட்டோம். நான், என் தம்பி எல்லாம் பிறந்தது இங்கேதான். அப்பா கோகுல் தாஸ், அம்மா லேகா. அப்பா செகரட்ரியேட்ல வேலை செய்கிறார். அம்மா அக்குபஞ்சர் தெரபிஸ்ட் மற்றும் மருத்துவர். இன்ஜினியரிங் முடிச்சிட்டு ஐடியிலே ஒரு வருஷம் வேலை செய்தேன். இப்போ சன் மியூசிக்கில் ஃபுல் டைமா நிகழ்ச்சித் தொகுப்பாளரா இருக்கேன்’.

இன்ஜினியரிங் படிப்பு, ஐடி வேலை திடீரென டிவி சேனல், மாடலிங் இதெல்லாம் எப்படி நடந்தது?

‘வீட்டிலே மொதல்ல எனக்கு எந்த வித எதிர்ப்பும் கிடையாது. அதுக்கு விதை போட்டதுன்னு சொன்னா என் தம்பிதான். ‘மெர்சல்’, ‘மகான்’ உள்ளிட்ட படங்களில் நடிச்ச காரணம் வீட்டில் மீடியா,சினிமா இதற்கெல்லாம் நல்லாவே சப்போர்ட் செய்தாங்க. அதனால் எனக்கும் இந்த ஆசை இருக்கறதும் அவங்களுக்கு ஏற்கனவே தெரியும். அதனால் பெரிய வித்யாசமா பார்க்கலை. மேலும் என்னை நான் பார்த்துப்பேன் என்கிற நம்பிக்கை அப்பா, அம்மா கிட்ட இருந்துச்சு. உனக்கென்ன தோணுதோ செய், நாங்க இருக்கோம்னு சொன்னாங்க.

ஸ்கூல் நாட்கள்ல இருந்தே ரேம்ப் வாக், ஃபேஷன் ஷோ இதெல்லாம் நானே திட்டமிட்டு அதுக்கு புரோகிராம் தலைமை மாதிரி நிறைய செய்திருக்கேன். அடுத்தடுத்து காலேஜ் டேய்ஸ்லயும் இதெல்லாம் தொடர்ந்துச்சு. அப்பறம்தான் இடையிலே படிப்பு , வேலைன்னு பிரேக். ஆனால் என்னவோ நமக்கான துறை இது இல்லையே என்கிற குரல் மட்டும் உள்ளே கேட்டுட்டே இருந்துச்சு. தொடர்ந்து மாடலிங், பத்திரிகைகளில் புகைப்படங்கள், தொடர்ந்து ரேம்ப் வாக், ஃபேஷன் நிகழ்ச்சிகள் இப்படிக் கலந்துக்க ஆரம்பிச்சேன். அடுத்து சன் மியூசிக்கில் இண்டெர்வியூ கலந்துக்கிட்டே அங்கேயும் செலக்ட் ஆனேன். தொடர்ந்து மிஸ். தமிழ் நாடு’.

மிஸ் தமிழ்நாடு 2023 கிரீடம் சூட்டிய தருணம் பற்றி சொல்லுங்க?

‘நினைச்சாலே கனவு மாதிரி இருக்கு. எத்தனையோ பெண்கள், எத்தனையோ போட்டிகள் அதிலே நான் மிஸ்.தமிழ்நாடு 2023 கேட்கவே சந்தோஷமா இருந்துச்சு. கேள்விகள், போட்டிகள் எல்லாமே கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துச்சு. கலந்துக்கிட்ட அத்தனை பேரும் செம திறமைசாலிகள். அவங்க கூட போட்டி போட்டு நிற்க சில இடங்களில் தடுமாற்றமாதான் இருந்துச்சு’.

உங்களைப் பொருத்தவரை அழகு என்றால் என்ன?

‘மனசுதான். நாம மனதால் நல்லதே நினைச்சு, நல்லதே செய்தா அதனுடைய அழகுதான் முகத்திலே தெரியும். நான் மிஸ் தமிழ்நாடு பட்டம் வாங்கிட்டேன் என்கிறதுக்காக தமிழ் நாட்டிலேயே நான் தான் அழகுன்னு கிடையாது, மேலும் இந்த மேடை கிடைக்காத எத்தனையோ பெண்கள் இருக்காங்க. என்னைப் பொருத்தவரை அடுத்தவங்களுக்கு எந்த துன்பமும் கொடுக்காத மனசுதான் அழகு. எந்த அளவுக்கு அன்பை உன்னால கொடுக்க முடியுதோ அதுதான் அழகு’.

ஓய்வு நேரத்திலே என்ன செய்வீங்க?

‘டான்ஸ் ஆட ரொம்ப பிடிக்கும்,கிளாசிக்கல் டான்ஸ் முறைப்படிக் கத்துக்கிட்டேன். கொஞ்சம் கடியா இருந்தா அப்படியே கிளம்பிப் போய் பிடிச்ச சாப்பாடெல்லாம் சாப்பிட்டுட்டு ஒரு படம் பார்த்திட்டு வருவேன். முதல் நாள் முதல் ஷோ தலைவர் படம் பார்க்கணும்னு ஒரு ஆசை. இப்போ வரைக்கும் அந்தக் கனவு மட்டும் கனவாகவே இருக்கு. சீக்கிரம் பார்த்திடுவேன். ‘ஜெய்லர்’ படம் முதல் நாள் முதல் ஷோ.

அடுத்து உங்க கெரியர் திட்டம் என்ன? சினிமாவா அல்லது மாடலிங் துறையா?

‘சினிமா கதைகள் கேட்டிருக்கேன், விரைவில் அறிவிப்புகள் வரும். அதற்கு முன்னாடி மிஸ். தென்னிந்தியப் போட்டிகளுக்கும் தயாராகிட்டு இருக்கேன். தொடர்ந்து மிஸ். இந்தியா போட்டிகள் இருக்கு. அதிலே எப்படியாவது ஜெயிக்கணும்’

வாழ்த்துகள் அக்‌ஷதா தாஸ்!

– ஷாலினி நியூட்டன்

The post 2023 ன் மிஸ் தமிழ்நாடு! appeared first on Dinakaran.

Tags : nadu ,Vijay Sar ,
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து