×

புங்கனூரில் நடந்த கலவரத்தில் ஒரு கண் இழந்த காவலருக்கு ₹10 லட்சம் நிதியுதவி

*துணை முதல்வர் நாராயணசாமி வழங்கினார்

சித்தூர்: புங்கனூரில் நடந்த கலவரத்தில் ஒரு கண் இழந்த காவலருக்கு அரசு சார்பில் ₹10 லட்சம் நிதியுதவியை துணை முதல்வர் நாராயணசாமி நேற்று வழங்கினார்.சித்தூர் மாவட்டம், புங்கனூர் பகுதியில் கடந்த 4ம் தேதி நடந்த கலவரத்தின்போது தெலுங்குதேசம் கட்சியினர் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ரணதீர் என்பவர் மீது கல் வீசப்பட்டதில் அவரது இடது கண்ணில் காயம் ஏற்பட்டு பார்வை பறிபோனது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட காவலருக்கு அரசு சார்பில் ₹10 லட்சம் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி சித்தூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று நடந்தது.இதில், மாநில துணை முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு காவலர் ரணதீருக்கு ₹10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:முன்னாள் முதல்வர் சந்திரபாபு 15 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்து வந்தார். ஆனால், அவர் தீவிரவாதி போல் செயல்பட்டு வருகிறார்.

இது மிகவும் கண்டிக்கத்தக்கது. கடந்த 4ம் தேதி சித்தூர் ஒருங்கிணைந்த மாவட்டம், மதனப்பள்ளி அடுத்த குரப்பலக்கோட்டை மண்டலம், அங்கல்லு கிராமத்தில் பொதுக்கூட்டம் நடத்தினார். அப்போது, தெலுங்கு தேசம் கட்சியினர் வேண்டுமென்றே கலவரத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கலவரம் நடைபெறாமல் தடுத்து நிறுத்தினர்.

அங்கிருந்து சாலை வழியாக சித்தூர் மாநகரத்திற்கு சந்திரபாபு வரவேண்டும். ஆனால், அவர் அமைச்சர் பெத்தி ரெட்டி ராமச்சந்திரா ரெட்டியின் சொந்த தொகுதியான புங்கனூருக்கு செல்ல தொண்டர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். இதனால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் நாங்கள் ரூட் மேப்பின்படி பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளோம். ஆனால், நீங்கள் புங்கனூர் பகுதிக்கு செல்ல தடை விதிக்கிறோம். பாதுகாப்பு ஏற்பாடுகள் திடீரென செய்ய முடியாது என தெரிவித்தனர்.

ஆனால், போலீசாரின் தடையை மீறி புங்கனூர் பகுதிக்கு செல்வேன் என சந்திரபாபு தெரிவித்தார். மேலும், வேண்டுமென்றே கட்சி தொண்டர்களை தூண்டிவிட்டு போலீசாரின் மீது தாக்குதலில் நடத்த செய்தார். அப்போது, தெலுங்கு தேசம் கட்சியினருக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், தெலுங்கு தேசம் கட்சியினர் வேண்டுமென்றே போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 15க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பலத்த காயமடைந்தனர்.

இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ரணதீர் என்ற காவலர் மீது தெலுங்கு தேசம் கட்சியினர் கண்மூடித்தனமாக கற்கள் வீசியதில், அவருக்கு இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை திருப்பதி கண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அவரது ஒரு கண் முற்றிலும் பார்வை இழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து, காயம் அடைந்த கண்ணை நீக்கிவிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த மாநில முதல்வர் ஜெகன்மோகன் உடனடியாக கண் பார்வை இழந்த காவலர் ரணதீருக்கு ₹10 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, தற்போது அவருக்கு ₹10 லட்சம் நிதி வழங்கப்பட்டது. அதேபோல், அவரது குடும்பத்தாருக்கு அரசு அனைத்து வகையிலும் பக்கபலமாக இருப்பதாக முதல்வர் ஜெகன்மோகன் உறுதி அளித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் சந்திரபாபு தூண்டிவிட்ட கலவரத்தில் காவலருக்கு கண் பறிபோனது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த சம்பவத்தில் இதுவரை 65 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், சந்திரபாபு முதல் குற்றவாளி என வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைக்க வேண்டும் என தெரிவித்து கொள்கிறேன்.

மேலும், சந்திரபாபு போலீசாரை பார்த்து இன்னும் 9 மாதங்கள் மட்டுமே உங்களுக்கு கால அவகாசம் உள்ளது. நான் வந்தவுடன் உங்களை ஒழித்து விடுவேன் என தெரிவித்து வருகிறார். ஒரு முன்னாள் முதல்வர் இதுபோன்ற அநாகரிகமான வார்த்தைகளை பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.அது மட்டுமல்லாமல் முதல்வர் ஜெகன்மோகனை சைக்கோ ஜெகன் என தரக்குறைவாக பேசி வருகிறார். முதல்வர் ஜெகன்மோகனின் 4 ஆண்டுகால ஆட்சியில் ஆந்திர மாநில மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். இதனால் மக்கள் அனைவரும் முதல்வர் ஜெகன்மோகன் உயிரோடு இருக்கும் வரை அவரை முதல்வராக இருக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.

இதை ஜீரணித்து கொள்ள முடியாத சந்திரபாபு நாயுடு கலவரத்தை ஏற்படுத்தினால், வரும் தேர்தலில் ஒரு சில இடங்களையும் நாம் கைப்பற்றலாம். இல்லையென்றால் ஒரு தொகுதி கூட நம்மால் கைப்பற்ற முடியாது என அறிந்து இது போன்ற தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். ஏழை, எளிய மக்களுக்கு முதல்வர் ஜெகன்மோகன் பல நன்மைகள் செய்து வருகிறார். அதற்கு ஒத்துழைப்பு தராமல் அவதூறு வார்த்தைகளால் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது.

வரும் தேர்தலில் தெலுங்கு தேச கட்சி ஒரு தொகுதி கூட கைப்பற்ற முடியாது. வரும் தேர்தலில்கூட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 175 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஜெகன்மோகன் முதல்வராக பதவி ஏற்பார். இதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. போலீசார் பொதுமக்களுக்கு கவசம் போல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இல்லை என்றால் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் நடுத்தெருவிற்கு வரும் அவலநிலை ஏற்பட்டு விடும்.

பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்துவது பீர் பாட்டில்களால் தாக்குதல் நடத்துவது போலீஸ் வாகனங்களை தீவைத்து கொளுத்துவது இது போன்ற செயல்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.அது மட்டுமல்லாமல் சந்திரபாபு கர்நாடக மாநிலத்தில் இருந்து ரவுடிகளை வரவழைத்து வேண்டுமென்றே கலவரத்தை ஏற்படுத்தி வேடிக்கை பார்த்து வருகிறார். அவருக்கு மத்திய அரசு பாதுகாப்பு அதிகாரிகளை அமைத்துள்ளது. ஆனால், அப்பாவி தெலுங்கு தேசம் கட்சியினர் அவருக்காக பலியாகி வருகின்றனர். இனியாவது தெலுங்கு தேசம் கட்சியினர் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.அப்போது, கலெக்டர் மோகன், எஸ்பி ரிஷாந்த், இணை எஸ்பிக்கள் சுதாகர், லட்சுமி மற்றும் காவலர் ரணதீர், அவரது மனைவி மற்றும் ஏராளமான காவல் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

The post புங்கனூரில் நடந்த கலவரத்தில் ஒரு கண் இழந்த காவலருக்கு ₹10 லட்சம் நிதியுதவி appeared first on Dinakaran.

Tags : Punkanur ,Deputy ,Chief Minister ,Narayanasamy ,
× RELATED மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியில்...