×

அரசு விதித்த காலக்கெடு முடிந்தது கொசூரில் பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

*அதிகாரிகள் அதிரடி

தோகைமலை : தோகைமலை அருகே உள்ள கொசூர் கடைவீதியில் அரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறையினர் நேற்று அதிரடியாக அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.தோகைமலை அருகே கொசூர், தொண்டமாங்கிணம், மத்தகிரி, கொசூர் ஆகிய 3 ஊராட்சி நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, திருச்சி – பாளையம் மெயின் ரோட்டில் அரசு இடத்தை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் கட்டப்பட்டன. மேலும் அவற்றை வாடகைக்கு விட்டு தனி நபர்கள் ஆதாயமடைந்து வந்தனர். இதனால் அரசுக்கு மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு வந்தது. மேலும், ஆக்கிரமிப்பு கடைகளால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டு வந்தது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் ஆக.8ம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும் என, சம்பந்தப்பட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு சில கடைகளை தவிர பெரும்பாலான கடைகள் நேற்று வரை அகற்றாமல் இருந்தனர்.இந்நிலையில் நேற்று காலை கடவூர் தாசில்தார் முனிராஜ், தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கோகுல்நாத், மைலம்பட்டி ஆர்ஐ நெப்போலியன் ஆகியோர் தலைமையில் பொக்லைன் இயந்திரம் மூலம் சுமார் 50 கடைகளின் முன் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

மேலும் அரசுக்கு சொந்தமான இடங்களில் நிரந்தரமாக கான்கிரீட் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் கட்டிடம் உள்ள பகுதிகளை அளவீடு செய்தனர். பின்னர் ஆக்கிரமிப்பு செய்துள்ள கட்டிட உரிமையாளர்களுக்கு, 15 நாள்களுக்குள் தாங்களாவே அகற்றிக்கொள்ள முறைப்படி தபால் அளிக்கப்படும் என்றும், குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு இடத்தை ஆக்கிரமித்து, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தி வரும் அனைத்து கடைகளையும் அகற்றுவதற்கு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமித்து உள்ள கடைகளை அதிகாரிகள் அதிரடியாக அகற்றியதால் திரளான பொதுமக்கள் திரண்டு வேடிக்கை பார்த்தனர்.

The post அரசு விதித்த காலக்கெடு முடிந்தது கொசூரில் பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Kosur ,Thokaimalai ,Dinakaran ,
× RELATED கடவூர், தோகைமலை பகுதியில் கம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்