×

ஆன்மீக அர்த்தங்கள்: தெய்வீகக் கனவு கண்டால் அதனை சொல்லக்கூடாது என்கிறார்களே ஏன்?

தெய்வீகக் கனவு கண்டால் அதனை சொல்லக்கூடாது என்கிறார்களே ஏன்?
– சிவகுரு, சென்னிமலை.

தான் வணங்கும் இஷ்ட தெய்வத்தை, அதில் விருப்பம் இல்லாதவர்களுக்கே கூறினால், அவர்கள் செய்யும் ஏளனங்களால் அல்லது காட்டும் அசிரத்தையால் நம் நம்பிக்கை குறைய வழி உண்டு! எனவே இப்படிச் சொல்லியிருக்கலாம்.

‘அது என்ன, பெரிய கம்பசூத்திரமா?’ என்று சொல்கிறார்களே, கம்பசூத்திரம் என்றால் என்ன?
– ஸி. கேசவமூர்த்தி, ஈரோடு.

அது கம்பசூத்திரம் அல்ல; ‘கம்ப சித்திரம்’. கம்பனுடைய ராமாயணத்தைப் படிப்பவர்கள், அந்த சொல் அலங்காரத்தில் மயங்குவதோடு, அவர் வர்ணிக்கும் காட்சிகளை, சம்பவங்களை எல்லாம் அப்படியே தத்ரூபமாக, மனக்கண்முன் கொண்டுவர முடியும். அத்தகைய விஷுவல் எஃபெக்ட் உள்ள பாடல்கள் அவை. அப்படி ஒரு திறமையினை, சிறப்பினை யாரும் எளிதில் அடைந்துவிட முடியாது என்பது உண்மை. அதனால்தான், ஒருவர் தன்னால் முடியக்கூடிய எந்த வேலையையும் ‘இது ஒன்றும் கம்பச் சித்திரம்போலக் கடினமான வேலையல்ல’ என்று சவால் விடுக்கும் தோரணையில் அப்படிச் சொல்கிறார்கள்.

பூஜை முறைகள் ஏன் இவ்வளவு நீண்டதாக இருக்கின்றன? ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை மட்டும் சொல்லி தியானம் செய்தால் போதாதா?
– பரத், சிங்கப்பூர்.

இளைஞன் ஒருவன், காட்டுவழியே 20 கிலோ மீட்டர் தொலைவு செல்லவேண்டும். இருட்டு நேரத்திலும் பயணம் தடைப்படாமல் இருப்பதற்காக, பெரியவர்கள் அவனிடம் ஒரு டார்ச் லைட்டை கொடுத்தார்கள். அதை இயக்கிப் பார்த்த இளைஞன், அதன் வெளிச்சம் நான்கடி தொலைவுக்கு மட்டுமே விழுந்ததைக் கண்டான். ‘நான் இருபது கிலோ மீட்டர் போகவேண்டும், வெறும் நாலடிக்கு வெளிச்சம் காட்டும் இந்த விளக்கு ஒரு வேஸ்ட்’ என்று சொல்லி சலித்துக் கொண்டான். உடனே பெரியவர்கள், ‘கூடுதல் பேட்டரிகளை வைத்துக்கொள்.

அந்த ஒளியின் துணையுடன், நீ சுலபமாக உன் பயணத்தை முடிப்பாய்’ என்று அறிவுறுத்தினார்கள். மந்திரம் அல்லது இறை நாமம் என்பது வழிபாட்டின் முதல்படி. நெடுந்தொலைவு பக்திப் பயணத்திற்கு உதவும் சிறு ஒளி. அந்த ஒளியைத் தொடர்ந்து செல்லும்போது மனம் தெளிவு பெற்று, பயணத்தை எளிதாக்க, கூடுதல் உத்திகளை கையாளுவது போலதான் பூஜைகள். அவரவர் வசதிக்கேற்ப, சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப வெறும் இறை நாமமோ, பூஜை வழிபாடுகளோ மேற்கொள்ளலாம். நாம் வாழ்வில் கடைத்தேறுவதே நோக்கமாக இருக்க வேண்டும்.

தெய்வத் திருவுருவங்களை ஊஞ்சலில் வைத்து ஆட்டி, பாடி மகிழும் வழக்கம் நெடுங்காலமாக உள்ளதே, இதன் தத்துவம் என்ன?
– ராஜா, திருவிடந்தை.

தெய்வத்தை தூரத்தில் எங்கேயோ ஒதுக்கி வைத்துவிடாமல் மனித வாழ்வுக்கு ஏற்ப உடை, உணவு வழக்கங்களை அவர் மீது வழங்கிக்கொண்டு ரசித்து வணங்குவது ஒரு பக்தி மரபு.

பக்தி வந்துவிட்டது என்பதை எப்போது அறிய முடியும்?
– அர்ஜூன், பாண்டிச்சேரி.

கடவுளின் பெயரைச் சொன்னால் எப்போது உடம்பு சிலிர்த்து, கண்ணில் நீர் பெருகிறதோ அப்போது பக்தி வரத் தொடங்கிவிட்டது. அல்லது கடவுளின் பெயர் ஒரு காதலி பெயரைப்போல நாவில் எப்போதும் தித்திப்பை உண்டாக்குகிறதோ, அப்போதும் பக்தி வந்துவிட்டது என்று புரிந்துகொள்ளலாம்.

தொகுப்பு: அருள்ஜோதி

The post ஆன்மீக அர்த்தங்கள்: தெய்வீகக் கனவு கண்டால் அதனை சொல்லக்கூடாது என்கிறார்களே ஏன்? appeared first on Dinakaran.

Tags : Sivaguru ,Chennimalai ,Ishta ,
× RELATED சென்னிமலை பேரூராட்சியில் பழுதடைந்து கிடக்கும் பேட்டரி வாகனங்கள்