×

டெல்லி சேவைகள் சட்ட மசோதாவை எதிர்த்து வாக்களித்த திமுக முதல்வர் ஸ்டாலினுக்கு டெல்லி முதல்வர் நன்றி தெரிவித்து கடிதம்

டெல்லி: ஒன்றிய அரசு கொண்டுவந்த டெல்லி சேவைகள் சட்ட (திருத்த) மசோதா, 2023-ஐ எதிர்த்து வாக்களித்த திமுகவுக்கு, 2 கோடி டெல்லி மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் டெல்லி மக்களின் உரிமைகளுக்காகப் போராடியதற்காக மனமார்ந்த பாராட்டுக்களைப் பதிவு செய்கிறேன் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப் போல் தரம் குறைக்கும் வகையில், மாநிலங்களவையில் ஒன்றிய பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட டெல்லி சேவைகள் சட்ட (திருத்த) மசோதாவினை திமுக சார்பில் எதிர்த்ததைத் தொடர்ந்து, அதற்கு நன்றி தெரிவித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் , தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு செவ்வாய்க்கிழமை (8-8-2023) கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “ஒன்றிய அரசு கொண்டுவந்த டெல்லி சேவைகள் சட்ட (திருத்த) மசோதா, 2023-ஐ எதிர்த்து வாக்களித்த திமுகவுக்கு, 2 கோடி டெல்லி மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் டெல்லி மக்களின் உரிமைகளுக்காகப் போராடியதற்காக மனமார்ந்த பாராட்டுக்களைப் பதிவு செய்கிறேன்.

இந்திய அரசியலமைப்பின் கொள்கைகள் மீது, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை பல்லாண்டுகளுக்கு நினைவுகூரப்படும். அரசியலமைப்பை பலவீனப்படுத்தும் சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் தமிழக முதல்வரின் தொடர்ச்சியான ஆதரவை எதிர்பார்க்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி அவசர சட்டம் மாநிலங்களவையில் நேற்று நிறைவேறியது. சுமார் 8 மணிநேர விவாதத்துக்கு பின் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மாநிலங்களவையில் நிறைவேறியது. டெல்லி அவசர சட்ட மசோதா மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 131 எம்பிக்களும் எதிர்ப்பு தெரிவித்து 102 வாக்குகளும் பதிவாகின. நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவு அளித்தன.

மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய ஆம் ஆத்மியின் ராகவ் சதா, “டெல்லிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் எல்.கே. அத்வானி ஆகியோர் விரும்பினர். ஆனால், தற்போதைய பாஜக தனது சொந்தக் கட்சித் தலைவர்களை பின்பற்றாமல் செயல்படுகிறது. டெல்லியில் தொடர்ச்சியாக பல தேர்தல்களில் தோல்வியடைந்ததற்கு, இந்த மசோதா மூலம் பாஜக எதிர்வினையாற்றுகிறது” என்று அவர் குற்றம் சாட்டி பேசியிருந்தார்.

The post டெல்லி சேவைகள் சட்ட மசோதாவை எதிர்த்து வாக்களித்த திமுக முதல்வர் ஸ்டாலினுக்கு டெல்லி முதல்வர் நன்றி தெரிவித்து கடிதம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,CM ,Stalin ,Government of the Union ,Dinakaran ,Chief Minister ,
× RELATED “சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services)...