×

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் அரசாணை முழுமையாக அமல்படுத்தப்படுகிறது: ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்

சென்னை: போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அதிக அபராதம் விதிக்கும் அரசாணை முழுமையாக அமல்படுத்தப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்தது. இந்த திருத்தங்களின் அடிப்படையில், தமிழக அரசு போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை உயர்த்தி 2022ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி அரசாணை வெளியிட்டது. இருந்தபோதும் விதிமீறல்கள் தொடர்வதால் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அதிக அபராதம் விதிக்கும் அரசாணையை திறம்பட அமல்படுத்தக்கோரி மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

மனுவில், அபராதத்தை உயர்த்தியதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு நிலவுவதால் வாகன தணிக்கையில் ஈடுபடுவதை போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு விதிமீறி வாகனங்கள் இயக்குவது தொடர்கிறது. அதிவேகமாக செல்வது, போதையில் செல்வது, செல்போனில் பேசிக்கொண்டு வாகனங்களை இயக்குவது போன்ற விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர். சிறிய சாலையில் செல்லக்கூடிய இருசக்கர வாகனங்கள் முதல், நெடுஞ்சாலையில் செல்லக்கூடிய கனரக வாகனங்கள் வரை போக்குவரத்து விதிகளை மீறுவதால் உயிரிழப்புகளும், காயங்களும், உடல் பாகங்களை இயக்கக்கூடிய சூழ்நிலையும் ஏற்படுவதாக மனுவில் வேதனை தெரிவித்துள்ளார்.

அதனால் விதிமீறலில் ஈடுபடுவோரை மருத்துவமனைகளில் இருக்கக்கூடிய அவசர சிகிச்சை பிரிவில் குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு பணியாற்ற உத்தரவிட வேண்டும் என்று அரசுக்கு கடிதம் எழுதியும் அதை பரிசீலிக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசாணை முழுமையாக அமல்படுத்தப்பட்டு வருவதாக தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விளக்கம் அளித்தார். போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் அரசாணை முழுமையாக அமல்படுத்தப்படுகிறது.

போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக கடந்த வாரம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்தது. குறிப்பிட்ட எந்த சம்பவத்தையும் மனுதாரர் மனுவில் தெரிவிக்கவில்லை என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள், போக்குவரத்து விதிமீறலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்த வேண்டியது அரசின் கடமை குறிப்பிட்டார். தொடர்ந்து அரசு வழக்கறிஞர் அனிதா அளித்த விளக்கத்தை ஏற்று வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

The post போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் அரசாணை முழுமையாக அமல்படுத்தப்படுகிறது: ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Tamil Nadu Govt ,Chennai High Court ,
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...