×

திருப்பங்களை தந்தருளும் திருத்தணி முருகன்

* முருகப் பெருமான் தேவர்களின் துயரம் நீங்கும் பொருட்டு சூரபத்மனோடு செய்த பெரும் போரினாலும், வள்ளியை மணக்க வேடர்களோடு விளையாட்டாக நிகழ்த்திய போரினாலும் ஏற்பட்ட கோபம் தணிந்து அமர்ந்த தலம் இது. ஆகவே தணிகை என்றானது.

* ஒரு வருடத்தின் 365 நாட்களைக் குறிக்கும் வகையில் 365 படிகளுடன் திகழ்கிறது திருத்தணி மலை. ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்றும் திருத்தணியில் படித்திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

* இங்கே மயிலுக்குப் பதிலாக ஐராவத யானையே முருகப் பெருமானின் வாகனமாகத் திகழ்கிறது.

* இங்குள்ள விஷ்ணு தீர்த்தத்தில் பங்குனி உத்திரத்தன்று நீராடி முருகனை வணங்கினால் எல்லா நலன்களும் கிட்டும் என்பது ஐதீகம்.

* பிரம்மன் நீராடிய பிரம்ம தீர்த்தமும், அவர் நிறுவிய பிரம்மேஸ்வரரும்; சரஸ்வதி நீராடிய சரஸ்வதி தீர்த்தமும், அவர் பிரதிஷ்டை செய்த சரஸ்வதீஸ்வரரும் இங்கு உள்ளன.

* தணிகை முருகனின் அபிஷேகத்திற்கு இந்திர நீலச் சுனையின் தீர்த்தமே பயன்படுத்தப்படுகிறது. இதில், பக்தர்கள் நீராட அனுமதியில்லை.

* துவாபர யுகத்தில் அர்ஜுனன் தீர்த்த யாத்திரை செய்தபோது, திருத்தணிக்கு வந்து முருகப் பெருமானை வணங்கிச் சென்றானாம்.

* அருணகிரிநாதர் தமது திருப்புகழிலும், தனிப்பாடல்கள் மூலமாகவும் (மொத்தம் 65 பாடல்கள்) தணிகை முருகனை போற்றுகிறார்.

* சரவணப் பொய்கை எனும் குமார தீர்த்தத்தில், வைகாசி விசாகத்தன்று நீராடி முருகனை வழிபடும் பக்தர்கள், அனைத்து தோஷங்களிலிருந்தும் விடுதலையாவதாக ஐதீகம்.

* இந்திரன், தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணமுடித்தபோது, சீதனமாக அளித்த சந்தனக்கல் இன்றும் திருத்தணிகை ஆலயத்தில் பயன்படுத்தப்படுகிறது.

* முதல் பிராகாரத்திலுள்ள ஒரு லட்சம் ருத்ராட்சங்களினாலான மண்டபத்தில், உற்சவர் அருள்கிறார்.

* இந்த பிராகாரத்தின் மேற்குப் பகுதியில் உள்ள பாலமுருகனுக்கு ஆருத்ரா தரிசனம் அன்று வெந்நீர் அபிஷேகம் நடைபெறுகிறது.

* தமிழ்க் கடவுளான முருகன், வள்ளி – தெய்வானை சந்நதிகள் `ஃ’ எனும் ஆயுத எழுத்து போல் அமைந்திருப்பது இந்த தலத்தின் சிறப்பு.

* தாரகாசுரன் திருமாலிடமிருந்து பறித்த சக்ராயுதத்தை தணிகை முருகன் மேல் ஏவினான். அந்தத் தழும்பை இன்றும் முருகனின் திருமேனியில் காணலாம்.

* பக்தர்கள் எல்லா சந்நதிகளையும் தரிசித்தபின், நிறைவாக ஆபத்சகாய விநாயகரை தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.

* முருகப் பெருமான் சினம் தணிந்து அருளும் தலமாதலால், திருத்தணியில் சூரசம்ஹார வைபவம் நடைபெறுவதில்லை.

* ஆனிமாதம் 29-ஆம் நாள் வர்தந்தி உற்சவம் திருத்தணியில் சங்காபிஷேகத்தோடு நடக்கும். அன்று முருகப் பெருமான் தங்கமயில் வாகனத்தில் தரிசனமளிப்பார்.

* சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதருக்கு, முருகன் இங்கே கல்கண்டை தந்து பாடல் இயற்றும் வல்லமையை அருளினாராம்.

* வள்ளலார் கண்ணாடியில் கண்டது திருத்தணி முருகனையே என்பார்கள். இதை அவர் திருவருட்பா ஐந்தாம் திருமுறையில் ‘சீர் கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும், தணிகாசலம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தொகுப்பு: ரமேஷ்

The post திருப்பங்களை தந்தருளும் திருத்தணி முருகன் appeared first on Dinakaran.

Tags : Tiruthani Murugan ,Lord ,Muruga ,Soorapadman ,Vedars ,Valli ,
× RELATED அப்பனே முருகா..!: முருகனின் ஆறுபடை வீடுகளும்.. அதன் சிறப்புக்களும்..!!