×

சென்னையின் முக்கிய பகுதிகளில் மாநகராட்சி கண்காணிப்பில் தெரு உணவு கடைகள் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யும் பணி தீவிரம்: n முதற்கட்டமாக பெசன்ட்நகர் கடற்கரையில் அமைகிறது n சுகாதாரத்துடன், சுவையான உணவு வழங்க ஏற்பாடு

சென்னை, ஆக.9: சென்னை மாநகராட்சி கண்காணிப்பில் சுத்தம், சுகாதாரத்துடன் சுவையான உணவு கிடைக்கும் வகையில், சென்னையில் ‘தெரு உணவு கடைகள்’ அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பெசன்ட்நகர் கடற்கரையில் தெரு உணவு கடை அமைக்கும் பணி விரைவில் தொடங்குகிறது. சென்னையில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், பிற மாநிலத்தை சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகையான உணவு பிடிக்கும். ஒரு சிலருக்கு இந்திய உணவுகள் பிடிக்கும், மற்றவர்களுக்கு சைனீஸ், தாய் அல்லது பிற நாட்டு உணவுகள் மீது மோகம் அதிகமாக இருக்கும்.

சென்னையை பொறுத்தவரை அனைத்து வகை உணவுகளும் கிடைக்கிறது. உணவு பிரியர்களும் இங்கு அதிகம் என்றே சொல்லலாம். என்னதான் ஏசி உணவகங்களுக்கு சென்று சாப்பிட்டாலும், சாலையோர தட்டுக்கடைகளில் கூட்டம் அலைமோதி கால்கடுக்க நின்று சாப்பிடுவது தனிசுகம் தான். ஆனாலும் ஏசியுடன் கூடிய பிரமாண்ட கடைகளுக்கு சென்றால் அதிக அளவு பணத்தை செலவழிக்க வேண்டியது வரும். எனவே, பட்ஜெட் போட்டு வாழும் நடுத்தர மக்கள் எப்போதாவது ஒருமுறை தான் இதுபோன்ற கடைகளுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். மற்ற நேரங்களில் தெரு உணவு கடைகள் தான் அவர்களுக்கு சொர்க்கம். அதுபோன்ற, குறைந்த விலையில் சுவையான கடைகளை தேடி சென்று சாப்பிட செல்கின்றனர். ஆனாலும் இதுபோன்ற தெரு உணவு கடைகளில் சுத்தம், சுகாதாரம் பராமரிக்கப்படுகிறதா என்றால் கேள்வி குறியாகத் தான் உள்ளது.

இடவசதி இல்லாததால் குறைந்த அளவு தண்ணீரில் தெருவோரத்திலேயே பாத்திரங்களை சரியாக கழுவாமல் உணவு தயாரிக்கின்றனர். வாடிக்கையாளர்கள் சாப்பிடும் தட்டுகளுக்கும் அதே நிலை தான். ஆனாலும் அதை எல்லாம் சகித்து கொண்டு தான் வயிற்றை நிரப்பி செல்கின்றனர். சுகாதாரத்தை பார்த்தால் வயிற்று பசிக்கு வேறு எங்கு செல்வது என்ற நிலையில், இதுபோன்ற கடைகள் பல தரப்பட்ட மக்களுக்கு வாடிக்கையாகி விடுகிறது. மேலும், சென்னையில் பேச்சுலர்சுகள் பெரும்பாலானவர்களுக்கு உணவளிப்பது இதுபோன்ற தெரு உணவு கடைகள் தான். அவர்கள் சுவைக்கேற்ப குறைந்த விலையில் உணவை அள்ளித் தருவதும் இந்த தெரு உணவு கடைகள் தான். இப்படி பல தரப்பட்ட மக்கள் உணவுக்காக படையெடுத்து செல்வதும் தெரு உணவு கடைகள் என்றால் மிகையாகாது.

இப்படிப்பட்ட தெரு உணவு கடைகளில் சுத்தம், சுகாதாரத்துடன் சுவையான உணவு கிடைத்தால் எப்படி இருக்கும். அந்த ஏக்கத்தை நிறைவேற்றவே சென்னை மாநகராட்சி கண்காணிப்பில் புதிய ஒரு திட்டம் செயல்படுத்த முடிவு செய்யபட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் சிங்கார சென்னை 2.0 திட்டமானது திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் புதிய சுற்றுலா பகுதிகளை உருவாக்குவது, பழைய சுற்றுலா பகுதிகளை மேம்படுத்துவது என்று பல முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக சென்னையில் இருக்கும் கடற்கரைகளை சுத்தப்படுத்தும் பணிகளும், பல புதிய அலங்கார அமைப்புகளை ஏற்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முக்கியமாக சாலைகளையும், பொது இடங்களையும் சுத்தப்படுத்தும் பணிகளும் சென்னையில் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது. மேலும். சென்னையில் புட் டீரிட் அமைப்பதற்கான நடவடிக்கைளும் எடுக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் நடுத்தர மக்களுக்கும், பேச்சுலர்களுக்கும் சுத்தமான, சுகாதாரமான உணவு குறைந்த விலையில் கிடைக்க இந்த புதிய திட்டத்தை சென்னை மாநகராட்சி செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய இடங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.

இந்த தெரு உணவு கடையில் 20க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் இடம் பெறுவார்கள் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்கட்டமாக சென்னையில் பெசன்ட்நகர் கடற்கரையில் இந்த தெரு உணவு கடை அமைக்க இடம் இறுதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தெரு உணவு கடைகளும் சுகாதாரத்தின் அடிப்படையில் அமைகிறது. தணிக்கையின் அடிப்படையில் சுத்தமான தெரு உணவு கடைகள் அமைக்க அடையாளம் காணப்படுகின்றன. பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் உணவு கடைகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து, சென்னையில் பல இடங்களில் இதுபோன்ற தெரு உணவு கடைகள் திறக்க முடிவு செய்திருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நோய்களை தவிர்க்கலாம்
பெரும்பாலான விற்பனையாளர்கள் சுகாதாரம் தொடர்பான எந்த செயல்பாட்டு நடைமுறையையும் பின்பற்றுவது இல்லை. உணவை சாப்பிட்டால் பொதுமக்களுக்கு எவ்வித சுகாதார பிரச்னைகள் எழக்கூடாது. அந்த அடிப்படையில் உணவுகள் தயாரிக்கப்பட வேண்டும். இதை ஒவ்வொரு கடைகளும் பின்பற்றினால் மக்களுக்கு வரக்கூடிய வயிற்று உபாதைகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களை தவிர்க்கலாம்.

காஞ்சி, திருவள்ளூரிலும்…
சென்னையில் அமைய உள்ள தெரு உணவு கடைகளின் வரவேற்பை பொறுத்து சுகாதார மதிப்பீட்டின் அடிப்படையில் மேலும் பல மாவட்டங்களில் இதே போன்று கடைகளை அரசு அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளன. அங்கும் தெரு உணவு கடைகள் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post சென்னையின் முக்கிய பகுதிகளில் மாநகராட்சி கண்காணிப்பில் தெரு உணவு கடைகள் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யும் பணி தீவிரம்: n முதற்கட்டமாக பெசன்ட்நகர் கடற்கரையில் அமைகிறது n சுகாதாரத்துடன், சுவையான உணவு வழங்க ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Besantnagar Beach ,Chennai Corporation ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் 188 இடங்களில் தண்ணீர்...