×

ஆடி கிருத்திகை விழாவையொட்டி வடபழனி முருகன் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடு: அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி

சென்னை, ஆக.9: ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு, வடபழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது. வடபழனியில் உள்ள முருகன் கோயில் சிறப்பு பெற்றது. ஆண்டுதோறும் இந்த கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆடிக்கிருத்திகை விழா இன்று நடக்கிறது. அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு பள்ளியெழுச்சி பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து அபிஷேகம் செய்யப்படும். தொடர்ந்து, சந்தன காப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை, அபிஷேகம், புஷ்ப அங்கி அலங்காரம், அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இன்று முழுவதும் நடை மூடாமல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இரவு வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் மாடவீதி புறப்பாடு நடக்கிறது.

ஆடிக் கிருத்திகையையொட்டி வடபழனி முருகன் கோயிலிலுக்கு இன்று திரளான பக்தர்கள் வருவார்கள். இதையடுத்து பக்தர்களுக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கோயில் நான்கு முனை சந்திப்பில் டிக்கெட் கவுன்டர் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் மேற்கு, தெற்கு வாசல் வழியாக கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். வடக்கு, கிழக்கு வாசல் வழியாக பக்தர்கள் வெளியேறலாம். முதியோர்கள், கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் வருவோர், மாற்றுத்திறனாளிகளுக்கு மேற்கு நுழைவாயிலில் சிறப்பு வழி அமைக்கப்பட்டுள்ளது.

நேர்த்திக்கடன் செலுத்த வரும் பக்தர்கள் மேற்கு கோபுர வாசல் வழியாக உள்ளே அனுமதிக்கப்பட உள்ளனர். முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக, வள்ளி மண்டபம் அடுத்தபசு மடத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயில் உள்பிரகாரத்தில் 3 இடங்களில் குடிநீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. டிக்கெட் கவுன்டர்களில் இருந்து உள்ளே நுழையும் வரை பந்தல், தரை விரிப்பு வசதியுடன் வரிசை அமைக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள் கோயில் நுழைவாயிலில் உள்ள வளைவின் வலதுபுறம் உள்ள பாலம் அடியில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஆற்காடு சாலை, 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, வாகனங்களில் வருபவர்கள் சற்று தொலைவில், தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு வர, கோயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

The post ஆடி கிருத்திகை விழாவையொட்டி வடபழனி முருகன் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடு: அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி appeared first on Dinakaran.

Tags : Vadapalani Murugan Temple ,Audi Kriti Festival ,Chennai ,Audi Kritya Festival ,Adi Kriti Festival ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...