×

மிஷன் இந்திர தனுஷ் 5.0 சிறப்பு தடுப்பூசி முகாம்

கிருஷ்ணகிரி, ஆக.9: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிஷன் இந்திர தனுஷ் 5.0 சிறப்பு தடுப்பூசி முகாம் வருகிற 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி, மத்திய அரசின் மிஷன் இந்திர தனுஷ் 5.0 சிறப்பு தடுப்பூசி முகாம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு தடுப்பூசி முகாமானது 1 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும், தடுப்பூசி செலுத்த தவறிய விடுபட்டுள்ள குழந்தைகள் மற்றும் கர்ப்ப காலத்தில தடுப்பூசி செலுத்த தவறிய விடுபட்டுள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் ஆகும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருடந்தோறும் 27,500 குழந்தைகள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பயன்பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 270 துணை சுகாதார நிலையங்களின் பகுதிக்கு உட்பட்ட அங்கன்வாடி மையங்களில், வரும் 12ம் தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மிஷன் இந்திர தனுஷ் 5.0 சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தடுப்பூசி செலுத்த தவறிய, விடுபட்டுள்ள குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

மேலும், குழந்தைகளுக்கு உரிய காலகட்டத்தில் தடுப்பூசி மருந்துகளை தேசிய தடுப்பூசி அட்டவணையின்படி செலுத்திக்கொள்வதால், 12 வகையான ஆபத்தான நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தாமல் விடுபட்டு இருப்பின், உடனடியாக தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று, தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறும், கிருஷ்ணகிரி மாவட்ட பொதுமக்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை உயிர்க்கொல்லி நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post மிஷன் இந்திர தனுஷ் 5.0 சிறப்பு தடுப்பூசி முகாம் appeared first on Dinakaran.

Tags : Mission ,Indra ,Dhanush ,Krishnagiri ,Mission Indra Dhanush ,Krishnagiri district ,Dinakaran ,
× RELATED இந்த வார விசேஷங்கள்