தர்மபுரி, ஆக. 9: தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே ராமன் நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு தினசரி காலை 6.30 மணி முதல் 7 மணி வரை ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த மாதம் தர்மபுரி – வத்தல்மலை சாலை விரிவாக்க பணிகள் தற்போது நடந்து வருகிறது. இப்பணியின் போது ராமன் நகருக்கு செல்லும் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் ராமன் நகர் பகுதி மக்களுக்கு, கடந்த 2 வாரமாக ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் கடைகளில் விலைகொடுத்தும், வெளியில் சென்றும் குடிநீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ராமன்நகர் பகுதி மக்கள் சார்பில், மாவட்ட கலெக்டர் சாந்தியை நேரில் சந்தித்து, ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. கலெக்டர் உடனே ராமன் நகர் பகுதி மக்களுக்கு குடிநீர் குழாய் சீர்செய்து விரைவாக குடிநீர் வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தர்மபுரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனந்தராம விஜயரங்கன், சத்யா மற்றும் ஊராட்சி செயலர் சரவணன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் சதேப்படுத்திய குடிநீர் குழாயை நெடுஞ்சாலைத்துறை தான் சீர் செய்து தரவேண்டும் என கூறிவிட்டு புறப்பட்டு சென்றனர். இதுகுறித்து மாவட்ட நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் நாகராஜனுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உடனே குடிநீர் குழாயை சீரமைத்து குடிநீர் வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் குடிநீர் குழாயை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
The post சேதமான குடிநீர் குழாயை சீரமைக்க கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.
