×

தஞ்சாவூரில் நிரம்பாத முக்கிய குளங்கள் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்

 

தஞ்சாவூர், ஆக. 9: தஞ்சாவூரில் முக்கிய குளங்களில் நீர் நிரம்பாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உருவாகி இருக்கிறது. நீர்வழிப்பாதைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம்தேதி அன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து கல்லணையில் இருந்து ஜூன் 16ம்தேதி அன்று டெல்டா மாவட்ட பாசனத்திற்காக ஆறுகளில் தண்ணீர் திறக்கப்பட்டது.

அவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீர் இரண்டு மாதங்கள் ஆன நிலையில் இப்போது வரை தஞ்சாவூர் மாநகரில் உள்ள பல குளங்களுக்கு இன்னமும் தண்ணீர் வந்து சேரவில்லை. நகர பகுதியில் அமைந்துள்ள அய்யன்குளம், சாமந்தன் குளம், கருணாசாமி குளம், அழகி குளம் தஞ்சாவூர் புறநகர் பகுதியில் உள்ள சிங்கப்பெருமாள் குளம், கொத்தங்குளம், பெரியகோட்டை அகழி உள்ளிட்டவை நீர்நிலைகள் மக்களின் நீராதாரமாகவும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு காரணமாகவும் இருந்து வருகிறது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சீர்மிகு நகரம் திட்டத்தின் மூலம் தஞ்சாவூர் நகரில் உள்ள முக்கிய குளங்கள் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டன. ஆனால் அதற்கான நீர் வரும் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. இதனால் குளங்களுக்கு தண்ணீர் வருவது கேள்விக்குறியாகவே இருக்கிறது. அப்படியே குளங்கள் சீரமைக்கப்பட்டாலும் அதன் நீர்வழி பாதைகளையும் கண்டறிந்து அவற்றையும் தூர்வாரி சீரமைக்க வேண்டும்.

மேலும் குளங்களில் ஆற்று நீரை கொண்டு நிரப்ப வேண்டும் என தஞ்சாவூர் நகர மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். மேலும் ஐயன்குளம் மற்றும் சாமந்தன்குளம் ஆகியவற்றுக்கு போர்வெல் மூலம் நீர் நிரப்புவது நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தாது. எனவே ஆற்று நீரை அதற்குரிய பாதையில் கொண்டு வந்து குளத்துக்கு நீரை நிரப்ப வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே தஞ்சாவூர் நகர மற்றும் மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்களில் நீர் நிரப்பினால் மட்டுமே கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு இன்றியும் முறையாக சாகுபடியும் செய்ய முடியும் என தஞ்சாவூர் நகர மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தஞ்சாவூரில் நிரம்பாத முக்கிய குளங்கள் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Thanjavur, Va. 9 ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...