×

சில்லிபாயிண்ட்

* நீரஜ் தலைமையில் இந்தியா
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரியின் புதாபெஸ்ட்டில் ஆக.19-27 வரை நடக்க உள்ளது. இதில் பங்கேற்க 28 பேர் கொண்ட அணியை இந்திய தடகள கூட்டமைப்பு (ஏஎப்ஐ) அறிவித்துள்ளது. குண்டு எறிதல் வீரர் தேஜிந்தர்பால் சிங் காயம் காரணமாக பங்கேற்றவில்லை. ஈட்டி எறிதல் நட்சத்திரம் நீரஜ் சோப்ரா தலைமையிலான இந்திய அணியில் சந்தோஷ்குமார் தமிழரசன், பிரவீன் சித்திரைவேல், ஜெஸ்வின் ஆல்ட்ரின், ராஜேஷ் ரமேஷ், அனில் ராஜலிங்கம் ஆகிய தமிழ் நாடு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். மகளிர் பிரிவில் ஜோதி யாராஜி (100 மீ. ஹர்டுல்ஸ்), பாரூல் சவுத்ரி (3000 மீ. ஸ்டீபிள்சேஸ்), அன்னு ராஜி (ஈட்டி எறிதல்), பாவ்னா ஜாட் (20 கி.மீ. நடை ஓட்டம்) பங்கேற்க உள்ளனர்.

* பிரான்ஸ் முன்னேற்றம்
மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடரின் ‘ரவுண்ட் ஆப் 16’ சுற்றில் நடந்த கடைசி போட்டியில் பிரான்ஸ் – மொராக்கோ அணிகள் மோதின. இப்போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று காலிறுதிக்கு முன்னேறியது. அந்த அணியின் டயானி (15’), கென்ஸா டாலி (29’), யூஜெனி சாமர் (23’ மற்றும் 70வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர்.
*காலிறுதி அட்டவணை
ஆக. 11: ஸ்பெயின் – நெதர்லாந்து, ஜப்பான் – ஸ்வீடன்
ஆக. 12: ஆஸ்திரேலியா – பிரான்ஸ், இங்கிலாந்து – கொலம்பியா

*களம் மாறும் நெய்மர்
பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் ஜூனியர் நெய்மர் (31), தற்போது பிரான்சின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். அவரது ஒப்பந்தம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், ‘ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பவில்லை’ என்று பிஎஸ்ஜி நிர்வாகத்திடம் நெய்மர் தெரிவித்து விட்டார். அவர் மீண்டும் ஸ்பெயினின் பார்சிலோனா அணியில் இணைந்து விளையாட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மெஸ்ஸி (அர்ஜென்டினா) ஏற்கனவே பிஎஸ்ஜி அணியில் இருந்து விலகி அமெரிக்காவின் இன்டர் மயாமி அணிக்காக விளையாடி வரும் நிலையில், கிலியன் எம்பாப்பே (பிரான்ஸ்) அடுத்த ஆண்டுடன் முடிய உள்ள ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பவிலை என்று தெரிவித்து விட்டார். இப்போது நெய்மரும் விலகுவது பிஎஸ்ஜி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

* காலிறுதியில் கொலம்பியா
ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிக்கு முந்தைய ‘ரவுண்ட் ஆப் 16’ ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்தன. அதில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கொலம்பியா – ஜமைக்கா அணிகள் மோதின. இடைவேளையின்போது இரு அணிகளும் 0-0 என சமநிலையில் இருந்தன. 2வது பாதியில் முன்கள வீராங்கனை உஸ்மே கேத்தலினா கோல் அடிக்க (51வது நிமிடம்), கொலம்பியா 1-0 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

The post சில்லிபாயிண்ட் appeared first on Dinakaran.

Tags : Sillypoint ,Neeraj ,India World Athletics Championship ,Budapest, Hungary ,Silly ,Dinakaran ,
× RELATED சில்லிபாயின்ட்..