×

அரையிறுதியில் இந்தியா, மலேசியா அடுத்த 2 இடங்களுக்கு 3 அணிகள் போட்டி

சென்னை: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியின் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை உறுதி செய்துள்ள இந்தியா, மலேசியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இந்நிலையில், எஞ்சிய 2 இடங்களை பிடிக்க கொரியா, பாகிஸ்தான், ஜப்பான் அணிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. சென்னையில் நடந்து வரும் இத்தொடரின் லீக் சுற்று இன்றுடன் முடிவுக்கு வருகிறது. போட்டியில் பங்கேற்றுள்ள 6 அணிகளும் தலா 4 ஆட்டங்களில் விளையாடி உள்ள நிலையில்… இந்தியா 3 வெற்றி, ஒரு டிராவுடன் 10 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், மலேசியா 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 9 புள்ளிகள் பெற்று 2வது இடத்திலும் உள்ளன.

இன்று நடக்கும் கடைசி சுற்று லீக் ஆட்டங்களின் முடிவு எப்படி இருந்தாலும், இந்த அணிகள்தான் முதல் 2 இடங்களில் இருக்கும். அதனால் இந்த அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறி விட்டன. அரையிறுதியில் இந்த அணிகளுடன் மோதப்போகும் எஞ்சிய 2 அணிகள் எவை என்பது இன்றைய ஆட்டங்களின் முடிவில் தெளிவாகும். இதில் கொரியா, பாகிஸ்தான், ஜப்பான் அணிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. பாகிஸ்தான் இன்றைய ஆட்டத்தில் இந்தியாவையும், கொரியா அணி மலேசியாவையும் வென்றால் தலா 8 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறி விடும்.

ஜப்பான் அணி சீனாவை வீழ்த்தினாலும் 5 புள்ளிகளுடன் வெளியேற வேண்டி இருக்கும். அதே நேரத்தில் கொரியா, பாகிஸ்தான் அணிகள் எதிரணியுடன் டிரா செய்தாலும் தலா 6 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறலாம். ஜப்பான் வென்றாலும் பலன் இருக்காது. ஒருவேளை கொரியா, பாகிஸ்தான் அணிகள் தோற்று, ஜப்பான் மட்டும் வெற்றி பெற்றால் கோல்களின் எண்ணிக்கையை பொறுத்து இந்த 3 அணிகளின் அரையிறுதி வாய்ப்பு முடிவாகும். கடைசி இடத்தில் உள்ள சீன அணி ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

The post அரையிறுதியில் இந்தியா, மலேசியா அடுத்த 2 இடங்களுக்கு 3 அணிகள் போட்டி appeared first on Dinakaran.

Tags : India ,Malaysia ,Chennai ,Asian Champions Trophy Hockey Tournament ,Dinakaran ,
× RELATED மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது...