சென்னை: அறநிலையத்துறையின் தொன்மையான 409 கோயில்களில் திருப்பணிகள் தொடங்க மாநில வல்லுநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் தொன்மையான கோயில்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் வகையில் திருப்பணிகளுக்கு ஒப்புதல் வழங்கிட மாதந்தோறும் மாநில அளவிலான வல்லுநர் கூட்டம் நடந்து வருகிறது. அதன்படி, கடந்த 2 நாட்களாக மாநில அளவிலான வல்லுநர் குழு கூட்டம் இணை ஆணையர் (திருப்பணி) ஜெயராமன் தலைமையில் நடந்தது.
நேற்று முன்தினம் (7ம் தேதி) நடந்த கூட்டத்தில் சிறுவாபுரி வரதராஜ பெருமாள் கோயில், சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயில், காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோயில், குன்றத்தூர் தேவி பொன்னியம்மன் கோயில், அகரம் கைலாசநாதர் கோயில், திண்டுக்கல் மாவட்டம், தாமரைக்குளம், மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், போடி நாயக்கனூர் காளியம்மன் கோயில், தென்கரை வரதராஜ பெருமாள் கோயில், ஜெயங்கொண்டம் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட 234 கோயில்களுக்கும், சென்னை, பாடி கைலாசநாதர் கோயில்,
சீவலப்பேரி முப்பிடாரியம்மன் கோயில், ரெங்கசமுத்திரம் மணிமூலவிநாயகர் கோயில், ஆரல்வாய்மொழி பெருமாள் சுவாமி கோயில், மயிலாடி முத்தாரம்மன் மற்றும் சுடலைமாடசாமி கோயில், சேலம் அக்கரைப்பட்டி பச்சியம்மன் கோயில், தஞ்சாவூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில், நாச்சியார் கோயில், கிருஷ்ணகிரி மாவட்டம், வெப்பாலம் பட்டி ஆஞ்சநேய சுவாமி கோயில் உள்ளிட்ட 175 கோயில்களுக்கும் என மொத்தம் 409 கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
மாநில அளவிலான வல்லுநர் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த கோயில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடக்கப்படும்.
இக்கூட்டத்தில் ஆகம வல்லுநர்கள் சிவஸ்ரீ பிச்சை குருக்கள், அனந்தசயன பட்டாச்சாரியார், சந்திரசேகர பட்டர், அங்கீகரிக்கப்பட்ட தகுதி வாய்ந்த ஸ்தபதி தட்சிணாமூர்த்தி, கட்டமைப்பு வல்லுநர் முத்துசாமி, தொல்லியல் துறை வல்லுநர்கள் வசந்தி, ராமமூர்த்தி தொல்லியல் துறை வடிவமைப்பாளர் சத்தியமூர்த்தி உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தொன்மையான 409 கோயில்களில் விரைவில் திருப்பணிகள் தொடக்கம்: மாநில வல்லுநர் குழு ஒப்புதல் appeared first on Dinakaran.