×

நிர்வாக மேம்பாட்டிற்காக திருச்சி ஐஐஎம் உடன் ஆவின் நிறுவனம் ஒப்பந்தம்

சென்னை: ஆவின் நிறுவனத்தின் நிர்வாக மேம்பாட்டிற்காக திருச்சி ஐஐஎம்.யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில் நேற்று மாலை ஆவின் நிறுவனத்தின் நிர்வாக மேம்பாட்டிற்காக திருச்சி ஐஐஎம்.யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதை தொடர்ந்து, அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது: ஆவின் நிறுவனத்தின் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காகவும், மனிதவள மேம்பாட்டை உறுதிப்படுத்தவும், ஆலோசனைகள் வழங்குவதற்காகவும், முறையான மேலாண்மை செய்வதற்காகவும் அதன்மூலம் நிறுவனத்திற்கு அதிக பயன் கிடைக்கின்ற விதத்தில் தொழில்நுட்ப மேம்பாட்டை உறுதிப்படுத்தி ஆவின் சேவைகளை மேம்படுத்த திருச்சி ஐஐஎம்.யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளோம். நிச்சயமாக இது ஆவின் நிர்வாகத்தின் வளர்ச்சிக்கு ஒரு மைல் கல்லாக அமையும்.

ஆவின் நிறுவனம் சிறந்த கட்டமைப்பு கொண்டது. அனைத்து பிரிவுகளிலும் உள்ள ஊழியர்களுக்கு அவர்கள் துறை சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க இருக்கிறோம். விவசாயிகளுக்கு உடனடி ஒப்புகைச் சீட்டு வழங்கும் முறை மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஆவின் நிர்வாகத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 6.9% மின்சாரம் சேமிக்கப்பட்டு சுமார் ரூ.30 லட்சம் சேமிக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட புதிய சங்கங்கள் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பால் உபபொருட்களின் தரம் மற்றும் சுவை ஒரே மாதிரியான அளவை கொண்டதாக விரைவில் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில், பால்வளத்துறை இயக்குநர் மற்றும் மேலாண்மை இயக்குநர் வினீத், திருச்சி, ஐஐஎம் இயக்குநர் பவன் குமார் சிங், ஐஐஎம் பேராசிரியர் சரவணன் கலந்துகொண்டனர்.

The post நிர்வாக மேம்பாட்டிற்காக திருச்சி ஐஐஎம் உடன் ஆவின் நிறுவனம் ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Tags : Awin ,Trichy IIM ,Chennai ,Minister ,Disheries Mano Thangaraj ,MoU ,UK ,
× RELATED கோடைக்காலத்தையடுத்து இந்தாண்டு மோர்...