×

விஜய் படங்களை இயக்கியவர் மலையாள இயக்குனர் சித்திக் திடீர் மரணம்

திருவனந்தபுரம்: விஜய் நடித்த ‘ப்ரண்ட்ஸ்’, ‘காவலன்’ உள்பட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பிரபல மலையாள இயக்குனர் சித்திக் (63), கொச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று மரணம் அடைந்தார். மலையாளத்தில் கடந்த 2001ல் ‘ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சித்திக், தொடர்ந்து தெலுங்கு, இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் சேர்த்து 20 படங்கள் இயக்கியுள்ளார்.

மலையாளத்தில் மோகன்லால் நடித்த ‘வியட்நாம் காலனி’, ‘லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன்’, ‘பிக் பிரதர்’, மம்மூட்டி நடித்த ‘ஹிட்லர்’, ‘குரோனிக் பேச்சிலர்’, இந்தியில் சல்மான்கான் நடித்த ‘பாடிகார்ட்’, தமிழில் விஜய், சூர்யா நடித்த ‘ப்ரண்ட்ஸ்’, விஜயகாந்த் நடித்த ‘எங்கள் அண்ணா’, விஜய் நடித்த ‘காவலன்’, பிரசன்னா நடித்த ‘சாது மிரண்டா’, அரவிந்த்சாமி நடித்த ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ஆகிய படங்களை சித்திக் இயக்கியுள்ளார். சில படங்களை அவர் தயாரித்ததுடன், பல படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார்.

‘வருஷம் 16’ படத்தில் கார்த்திக் நண்பர் வேடத்தில் நடித்ததுடன், மலையாளத்தில் சில படங்களில் நடித்திருந்தார். கடந்த சில மாதங்களாக சித்திக் நுரையீரல் மற்றும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து சித்திக் கொச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு செயற்கை சுவாசக்கருவிகளின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சித்திக் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்று மாலை ெகாச்சியில் சித்திக் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. மறைந்த சித்திக்கிற்கு மனைவியும், 3 மகள்களும் இருக்கின்றனர்.

The post விஜய் படங்களை இயக்கியவர் மலையாள இயக்குனர் சித்திக் திடீர் மரணம் appeared first on Dinakaran.

Tags : vijay ,sitthik ,Thiruvananthapuram ,Sidthik ,Vijay Images ,
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...