×

அரியானாவில் வழிபாட்டு தலத்துக்கு தீ வைத்த 3 பேர் கைது

குருகிராம்: அரியானாவில் நள்ளிரவில் வழிபாட்டு தலத்துக்கு தீ வைத்த 5 பேரில் 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அரியானாவின் நூஹ் மாவட்டத்தில் கடந்த வாரம் வன்முறை வெடித்தது. இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இதனை தொடர்ந்து நகரின் பிற பகுதிகளிலும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது. இதன் எதிரொலியாக குருகிராமின் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஞாயிறன்று இரவு கந்த்சா கிராமத்தில் உள்ள வழிபாட்டு தலத்துக்கு 5 பேர் கும்பல் ஒன்று தீ வைத்தது. இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் குல்ஷான், விஜய் மற்றும் லலித் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே குருகிராமில் இறைச்சி கடை மீது கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. சிஆர்பிஎப் சதுக்கத்தில் உள்ள இறைச்சி கடை மீது சுமார் 12 பேர் கொண்ட கும்பலானது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் உரிமைாளர் லேசாக காயமடைந்தார். இது குறித்து அவர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வன்முறை நடந்த நூஹ் மாவட்டத்தில் காவல்துறை டிஎஸ்பி ஜெய் பிரகாஷ் பணியிட மாறுதல் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

* காங். குழுவுக்கு அனுமதி மறுப்பு
அரியானாவின் நூ மாவட்டத்தில் வன்முறை நிகழ்ந்த பகுதியை பார்வையிடுவதற்காக மாநில காங்கிரஸ் தலைவர் உதய் பான் தலைமையிலான பிரதிநிதிகள் 10 பேர் அடங்கிய குழு நேற்று நூ மாவட்டத்துக்கு சென்றது. ரோஜ்கா மீயோ கிராமத்தில் நுழைந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததால் பிரதிநிதிகள் குழு தடுத்து நிறுத்தப்பட்டதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

The post அரியானாவில் வழிபாட்டு தலத்துக்கு தீ வைத்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Haryana ,Ariana ,
× RELATED அரியானாவில் பேருந்து தீ விபத்து: 8 பேர் பலி