×
Saravana Stores

மோசடி நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க தெரியாத எண்களின் வீடியோ கால் அழைப்புகளை எடுக்க வேண்டாம்: பொதுமக்களுக்கு சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார் வேண்டுகோள்

சென்னை: புதிய எண்களில் இருந்து வரும் வீடியோ கால் அழைப்புகளை எடுக்க வேண்டாம் என்று மாநில சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார் பொதுமக்களுக்கு வேண்டுகொள் விடுத்துள்ளார். தமிழ்நாடு சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ அழைப்பு மோசடி தற்போது அதிகரித்துள்ளது. மோசடி செய்பவர்கள் முதலில் பாதிக்கப்பட்டவரின் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் போன்று நம்பகமான நபர்களின் திருடப்பட்ட படங்கள் மற்றும் ஆன்லைனில் கிடைக்கும் புகைப்படங்களை பயன்படுத்தி அவர்களை போல் ஒரு போலியான கணக்கு உருவாக்குகின்றனர்.

பிறகு செயற்கை நுண்ணறிவு மூலம் டீப்பேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிகவும் யதார்த்தமான வீடியோ அழைப்புகளை சமூக ஊடகங்கள், டேட்டிங் செயலிகள் அல்லது பிற ஆன்லைன் தளங்களில் உருவாக்கி பாதிக்கப்பட்டவருக்கு தெரிந்த நண்பர், குடும்ப உறுப்பினர்கள் போல் ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுகிறார்கள். பின்னர் அவர்களிடம் இருந்து வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்புமாறு மிரட்டுகின்றனர். எனவே, இதுபோன்ற மோசடி நபர்களிடம் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். தெரியாத எண்களிலிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம்.

நண்பர், குடும்ப உறுப்பினர் அல்லது சக பணியாளர் என கூறி கொள்ளும் ஒருவரிடமிருந்து வீடியோ அழைப்பு பெறும் போது, பணப் பரிமாற்றம் செய்வதற்கு முன் அவர்களின் அடையாளத்தை சரிபார்க்க அவர்களின் தனிப்பட்ட மொபைல் எண்ணுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளவும். ஆன்லைனில் நீங்கள் பகிரும் தனிப்பட்ட தகவலின் அளவை கட்டுப்படுத்துங்கள் மற்றும் சமூக ஊடகத்தளங்களில் உள்ள தனியுரிமை அமைப்புகளை சரிசெய்யவும்.
நீங்கள் இதுபோன்ற வீடியோ கால் மோசடிக்கு ஆளாகியிருந்தால் உடனடியாக சைபர் க்ரைமில் புகார் அளிக்கலாம். அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.

The post மோசடி நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க தெரியாத எண்களின் வீடியோ கால் அழைப்புகளை எடுக்க வேண்டாம்: பொதுமக்களுக்கு சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : DGB ,Sanjay Kumar ,Chennai ,
× RELATED தமிழகம் முழுவதும் கடந்த 9 மாதங்களில் 4,430...