×

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்: ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணனின் 1000 பக்க அறிக்கை; கலாஷேத்ரா அறக்கட்டளை தலைவரிடம் சமர்ப்பிப்பு

சென்னை: கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் குற்றம் செய்த பேராசிரியர் ஹரிபத்மனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான குழு, கலாஷேத்ரா அறக்கட்டளை தலைவர் ராமதுரைக்கு 1000ம் பக்கம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகள் அளித்த புகாரின்படி, உதவி பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில்,கலாஷேத்ரா நிர்வாகம் சார்பில் சம்பவத்தின் உண்மை நிலை அறிய, முன்னாள் நீதிபதி கண்ணன், முன்னாள் டிஜிபி லத்திகா சரண், டாக்டர் ஷோபா வர்த்தமான் ஆகியோர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த விசாரணை குழுவினர், கடந்த ஏப்ரல் 25ம் தேதி கல்லூரி மாணவிகள், மற்றும் பேராசிரியர்கள், உதவி நடன கலைஞர்களிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் விசாரணை குழு தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன், விசாரணை மற்றும் சீர் திருத்தம் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய 1000ம் பக்கம் கொண்ட அறிக்கையை நேற்று முன்தினம் கலாஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் எஸ்.ராமதுரையிடம் சமர்ப்பித்துள்ளனர்.

ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான குழு சமர்பித்த அறிக்கை குறித்து கலாஷேத்ரா கல்லூரியில் பணியாற்றும் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை குழு மொத்தம் 1000 பக்க அறிக்கையை அளித்துள்ளது. அந்த அறிக்கையில் பாலியல் தொடர்பாக முன்னாள், இந்நாள் மாணவிகள் அளித்த புகார் மட்டும் 86 பக்கம் கொண்டுள்ளது. மாணவிகளின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு கருதி, தங்களின் அறிக்கையை வெளியிடாமல், அறக்கட்டளை நிர்வாகம் மாணவிகளின் பாலியல் தொந்தரவுக்கு கொடுத்த நபர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக அறிக்கையில், உதவி பேராசிரியர் ஹரிபத்மன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மாணவிகளுக்கு பல வகைகளில் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். தனி வகுப்பு என்று தனது வீட்டிற்கு அழைத்து மாணவிகளை சீரழித்துள்ளார். இதற்கு பல நடன கலைஞர்களும் ஆதரவாக இருந்துள்ளனர். மேடை கச்சேரி ஏற்றுவதாக மாணவிகளை ஹரிபத்மன் தனது ஆசைகளை நிறைவேற்றி கொண்டார். மேலும், தனது ஆசைக்கு இணங்காத மாணவிகளை அவர் தேர்வு மதிப்பெண்கள் மூலம் பழிவாங்கியுள்ளார். எனவே, ஹரிபத்மனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். மாணவிகளின் பாதுகாப்பு கருதி கலாஷேத்ராவில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளனர்.

கலாஷேத்ரா ஒரு மேடை கச்சேரி நிறுவனமாக இல்லாமல் முதன்மையான உயர் கல்வி நிறுவனமாக விளம்பரம் படுத்துவதில் முழு கவனம் செலுத்த வேண்டும். இனி வரும் காலங்களில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். உதவி பேராசிரியர் ஹரிபத்மன் உள்ளிட்ட நபர்களுக்கு தண்டனை பெற்று தர கலாஷேத்ரா அறக்கட்டளை நிர்வாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இனி இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பட்டியலையும் கலாஷேத்ரா நிர்வாகத்திற்கு குழு அளித்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கலாஷேத்ரா கல்லூரியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

The post மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்: ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணனின் 1000 பக்க அறிக்கை; கலாஷேத்ரா அறக்கட்டளை தலைவரிடம் சமர்ப்பிப்பு appeared first on Dinakaran.

Tags : Haripadman ,Justice ,Kannan ,Kalashetra Foundation ,Chennai ,Prof. ,Kalashetra College ,Dinakaran ,
× RELATED அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும்...