×

அண்ணா பல்கலைக்கழக முறைகேடு முன்னாள் துணைவேந்தர் சூரப்பா ஆஜராக சம்மன்: பொது கணக்கு குழு அனுப்பியது

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டில் விசாரணை மேற்கொள்ள அதன் முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவை நேரில் ஆஜராக வேண்டும் பொது கணக்கு குழு சம்மன் அனுப்பி உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில், கடந்த காலங்களில் பணி நியமனங்களில் பணம் பெற்றது, கல்லூரிகளுக்கான பொருட்கள் வாங்கியதில் முறைகேடு, தகுதியற்றவர்களை பணி நியமனம் செய்தது உள்பட பல்வேறு சம்பவங்கள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, மதிப்பெண் சான்றிதழ், டிஜிட்டல் மயமாக்கியது, விடைத்தாள் திருத்துதல் போன்ற பணிகளிலும் முறைகேடுகள் நடந்ததாக சொல்லப்படுகிறது.

இதில் அப்போது அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அவரும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்துவிட்டார். இந்த சூழ்நிலையில் மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையின் அடிப்படையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தில் சட்டசபை பொதுக் கணக்கு குழு நேற்று ஆய்வில் ஈடுபட்டது. குழு தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. தலைமையில் சுமார் 20 பேர் கொண்ட குழுவினர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

ஆய்வுக்கு பிறகு, செல்வ பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழகத்தில் தவறுகள், ஊழல்கள் நடந்திருப்பதாக சட்டப்பேரவைக்கு மத்திய கணக்கு தணிக்கை குழுவை சார்ந்த மத்திய கணக்காயர்கள் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார்கள்.என்னென்ன குறைகளை அவர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள், எதெல்லாம் நீக்கப்பட வேண்டும் என்பது குறித்து தணிக்கை குழு உறுப்பினர்கள் ஆலோசனையை சொல்லி இருக்கிறார்கள். இன்னும் தீவிரமாக அதனை விசாரித்து, தீர்வை கொண்டு வருவதற்கு சட்டசபையில் அனைத்து கட்சியிலும் ஒருவர் வீதம் துணைக்குழுவை நியமிக்க இருக்கிறோம். துரிதமாக 15 நாட்களுக்கு ஒரு முறைகூடி பேசி குளறுபடிகளை சரிசெய்ய உள்ளோம்.

கடந்த 2016ம் ஆண்டு நடந்த குற்றச்சாட்டு அடிப்படையில் அப்போது இருந்த சில அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பலர் அதில் இருந்து தப்பித்துள்ளார்கள் என்பதுதான் மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களின் ஆலோசனை பெற்று 3 மாதங்களில் முழு அறிக்கையும் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள், பதிவாளர்கள் அடுத்த கூட்டத்திற்கு அழைத்துள்ளோம். இந்த கூட்டம் அடுத்த 15 நாட்களில் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த ஊழல் மற்றும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பான அடுத்த ஆய்வுக் கூட்டத்தில் முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவை ஆஜர்ப்படுத்த சட்டசபை பொது கணக்குக் குழு முடிவு செய்து இருக்கிறது. இதற்காக அந்த கூட்டத்தில் சூரப்பா ஆஜராக வேண்டும் என அவருக்கு பொது கணக்கு குழு சம்மன் அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

The post அண்ணா பல்கலைக்கழக முறைகேடு முன்னாள் துணைவேந்தர் சூரப்பா ஆஜராக சம்மன்: பொது கணக்கு குழு அனுப்பியது appeared first on Dinakaran.

Tags : Anna University ,Vice-Chancellor ,Surappa ,Public Accounts Committee ,CHENNAI ,vice ,Dinakaran ,
× RELATED மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் ராஜினாமா ஏற்பு