×

சிற்றாறு, பத்துகாணி பகுதியில் அட்டகாசம் செய்யும் புலியை பிடிக்க பழங்குடியினர் குழு விரைந்தது: வனக்காவலர்கள், மக்களுக்கு பயிற்சி அளிக்க திட்டம்

நாகர்கோவில்: சிற்றாறு, பத்துகாணி பகுதியில் அட்டகாசம் செய்யும் புலியை பிடிக்க 4 பேர் கொண்ட பழங்குடியின குழு விரைந்துள்ளனர். அவர்கள் வனக்காவலர்கள் மற்றும் மக்களுக்கு இதுதொடர்பாக பயிற்சியும் அளிக்க உள்ளனர். குமரி வனப்பகுதிகளில் யானைகள், கரடி, சிறுத்தை மற்றும் புலிகள் உள்ளன. இதில் தனியார் எஸ்டேட்கள் ஆதிக்கம் காரணமாக யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து வருகின்றன. ஆனால், இதர வன விலங்குகள் அதிகம் வந்ததில்லை. இந்நிலையில் கடந்த மாதம் சிற்றாறு சிலோன் காலனியில் புலி திடிரென புகுந்து ஆடு, மாடு மற்றும் வீட்டு வளர்ப்பு நாய்களை அடித்து சென்றது.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் மிகவும் பீதியடைந்தனர். புலியை பிடிக்க நவின கேமராக்கள் மற்றும் கூண்டுகள் அமைத்தும் அதனை பிடிக்க இயலவில்லை. இந்த நிலையில் நேற்று இரவில் அருமனை பத்துகாணி பகுதியில் அந்த புலி 4 ஆடுகளை கடித்து கொன்றுவிட்டது. எனவே புலி குடியிருப்பு பகுதிகளின் அருகில் உள்ளதா? அதனை எவ்வாறு கண்டறிவது என இங்குள்ள வனக்காவலர்கள் மற்றும் மக்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க ஊட்டி முதுமலை பகுதியை சேர்ந்த புலிகள் நடமாட்டம் பற்றி நன்றாக அறிந்து பழங்குடியினத்தை சேர்ந்த 4 பேர் சிற்றாறு சிலோன் காலனி பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடந்த 4 நாட்களாக புலி நடமாட்டம் அறிவது பற்றி வனக்காவலர்கள் மற்றும் அப்பகுதி மக்களுக்கு பயிற்சியும் அளிக்கின்றனர். இதுகுறித்து மாவட்ட வனஅலுவலர் இளையராஜா விடம் கேட்டபோது, பொதுவாக ஆண் புலி தனது வசிப்பிட பகுதியில் வேறு ஆண் புலிகளை அனுமதிக்காது. பெண் புலியும் 4 குட்டிகள் ஈன்று அதில் கடைசி குட்டி பலவினமாக இருந்தால், அதனை பாதுகாப்பது சிரமம் என்பதுடன், அதனால், தங்கள் கூட்டத்திற்கு ஆபத்து நேரும் என அதனை சாப்பிட்டுவிடும்.

இதுபோல், சேட்டை செய்யும் குட்டி புலியும் கூட்டத்தில் இருந்து துரத்தி விடப்படும். இவ்வாறு துரத்தி விடப்படும் குட்டி தனக்கான எல்லையை திட்டமிடும். இதற்காக அதிக உணவு கிடைக்கும் பகுதியை குறி வைக்கும். மேலும் காட்டுப்பன்றி மற்றும் மிளாக்கள் புலிகளின் மிகவும் விருப்ப உணவாகும். குமரி மலையடிவர பகுதிகளில் காட்டு பன்றிகள் மற்றும் மிளாக்கள் அதிகம். எனவே இதனை தேடி வந்த போது சிற்றாறு பகுதியை அது தேர்வு செய்திருக்கலாம். மேலும், காட்டுப்பன்றி, மிளா ஆகிய விலங்குகளை அதிக போராட்டம் இன்றி புலியால் வீழ்த்த முடிவதுடன், அதிகளவு மாமிசமும் கிடைக்கும்.

இதனால் சம்பல் எனப்படும் ஒரு மிளாவை வேட்டையாடினால், 6 நாட்கள் வரை புலிக்கு வேறு இரை தேவைப்படாது. எனவே சிற்றாறு பகுதிக்கு வந்த புலி, தனது கூட்டத்தை விட்டு துரத்தப்பட்ட புலியாகவோ, அல்லது கேரள வனத்திலிருந்து களக்காடு வனப்பகுதிக்கு மிளாக்களை தேடி வந்த புலியாகவோ இருக்கலாம். தற்போது இங்கு வனத்துறை மற்றும் பொதுமக்கள் துரத்தியதால், இந்த பகுதி தனக்கு பாதுகாப்பனது அல்ல என கருதிய புலி அந்த பகுதியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள பத்துகாணி பகுதியில் அட்டகாசத்தை தொடங்கிவிட்டது.

எனவே புலிகளை பற்றி நன்றாக அறிந்துள்ள ஊட்டி பகுதியை சேர்ந்த 4 மலைவாழ் பழங்குடியின சிறப்பு புலிகள் கண்காணிப்பு குழுவினர் சிற்றாறு பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வாசனை மற்றும் காலடி தடம் மூலம் அதன் இருப்பிடத்தை கண்டறிந்து பிடிப்பதில் வல்லவர்கள். இவர்கள் இங்குள்ள மக்களுக்கும் பயிற்சி அளிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். இந்த குழுவினர் தற்போது பத்துகாணி பகுதியில் அட்டகாசம் செய்து வரும் புலியை பிடிக்க உதவுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மனிதர்களை உணவிற்காக தாக்காது
வனவிலங்குகள் பொருத்தவரை அதற்கு வாசனைத்திறன் மற்றும் உருவம் ஆகியவற்றை கொண்டு தனக்கான உணவை தீர்மானிக்கும். மனிதர்களை பொருத்தவரை அவைகள் உணவாக கருதுவதில்லை. மேலும், அச்சம் கொள்ளும். இந்த அச்சம் காரணமாக தப்பி ஓடுவதற்காக மட்டுமே மனிதர்களை தாக்கும். சில நேரம், இயற்கை உபாதை கழிக்க மனிதர்கள் அமர்ந்து இருக்கும்போது, வேறு உயிரினம் என நினைத்து தவறுதலாகவே தாக்கும். ஆனால், தாக்கிய பின்னர், மனிதர் என்றால், அது தனக்கான உணவு அல்ல என விட்டு விட்டு சென்று விடும். ஆட்கொல்லி புலியாக மாறுவது என்பது மிகவும் அபூர்வான நிகழ்வாகும். இது பாம்பு உள்ளிட்ட இதர வனஉயிரினங்களுக்கும் பொருந்தும்.

அதுபோல், புலி மற்றும் யானை கூட்டத்தில் இருந்து புலி அல்லது யானைக்குட்டிகள் ஊருக்குள் புகுந்து விட்டால், அவற்றின் மீது மனிதர்களின் வாசனை இருக்கும். இதனால், அவற்றை வனத்திற்குள் கொண்டுவிட்டால், அதனை முன்னெச்சரிக்கை காரணமாக கூட்டத்தின் தலைமையான விலங்கு துரத்தி விடும். இதற்காக யானைக் குட்டி என்றால், அதன் மீது யானை லத்தியை பூசி தள்ளி நின்றே வனத்திற்குள் விடப்படும் என வனத்துறையினர் கூறினர்.

வனத்திற்குள் கால்நடைகள் வளர்க்க கூடாது
சிற்றாறு சிலோன் காலனி உள்பட வனப்பகுதிக்குள் ஆடு, மாடு மற்றும் நாய் வளர்க்க அனுமதியில்ைல. இதன் வாசனை காரணமாக வனவிலங்குகள் அப்பகுதிக்கு வரும் வாய்ப்புகள் அதிகம். எனவே தற்போது சிலோன் காலனியிலும், வளர்ப்பு பிராணிகளை வேறு இடத்திற்கு மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் கூறினர்.

The post சிற்றாறு, பத்துகாணி பகுதியில் அட்டகாசம் செய்யும் புலியை பிடிக்க பழங்குடியினர் குழு விரைந்தது: வனக்காவலர்கள், மக்களுக்கு பயிற்சி அளிக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Atakasam ,Battagani, Battagani ,Nagarko ,Battagani ,Tribal Group ,Dinakaran ,
× RELATED வாய்ப்பு கேட்ட விஜயதரணி காத்திருக்க சொன்ன அமித்ஷா