×

சென்னையில் பல்வேறு இடங்களில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் உறுதிமொழி ஏற்பு..!!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 11.08.2022 அன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு (DRUG FREE TAMILNADU)‘‘ என்ற திட்டத்தை துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து, சென்னை பெருநகரில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், Drive Against Drugs (DAD) என்ற பெயரில் போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு அதிரடி நடிவக்கைகள் மேற்கொண்டும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களான வணிக வளாகங்கள், கடற்கரை, பூங்காக்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் இதர இடங்களில் போதை பொருட்களுக்கு எதிரான தீமைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தியும், போதை பொருட்கள் நடமாட்டம் ஒழிக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, முதலமைச்சர் துவக்கி வைத்த “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” திட்டத்தின் படி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., உத்தரவின்பேரில், 08.08.2023 முதல் 13.08.2023 வரை போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் முகாம்கள் நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில், இன்று சென்னை பெருநகர காவல் 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்கள் தலைமையில், சென்னை பெருநகர காவல்துறை சார்பாக, பல்வேறு இடங்களில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

திருவல்லிக்கேணி காவல் மாவட்டம்
சென்னை பெருநகர காவல், திருவல்லிக்கேணி காவல் மாவட்ட துணை ஆணையாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், இ.கா.ப., தலைமையில், திருவல்லிக்கேணி சரக உதவி ஆணையாளர் எம்.எஸ்.பாஸ்கர், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள், இன்று காலை, மாநில கல்லூரி வளாகத்தில், சென்னை பெருநகர காவல்துறை சார்பாக ‘போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்‘ நடைபெற்றது. சுமார் 2,000 கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இம்முகாமில், போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்து, போதை ஒழிப்பு உறுதிமொழி மேற்கொண்டனர்.

கீழ்பாக்கம் காவல் மாவட்டம்
சென்னை பெருநகர காவல், கீழ்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையாளர்கோபி மேற்பார்வையில், கீழ்பாக்கம் சரக உதவி ஆணையாளர் துரை தலைமையில், இன்று காலை, புரசைவாக்கம், டாக்டர் அழகப்பா சாலையிலுள்ள எம்.சி.டி.எம். ஆண்கள் உயர்நிலை பள்ளி வளாகத்தில் சென்னை பெருநகர காவல்துறை சார்பாக ‘போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்‘ நடைபெற்றது. சுமார் 200 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட இம்முகாமில், போதை ஒழிப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டு, போதை ஒழிப்பு உறுதிமொழி மேற்கொண்டனர்

இதே போல, K-6 டி.பி.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில், இன்று காலை, பூந்தமல்லி நெடுஞ்சாலையிலுள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவிகளுடன், பள்ளி வாசலில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில், ‘போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த மனித சங்கிலி நடைபெற்றது.
G-7 சேத்துப்பட்டு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில், இன்று காலை, எம்.சி.சி. பள்ளி மாணவ, மாணவிகளுடன் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அயனாவரம் சரக உதவி ஆணையாளர் முத்துகுமார் மேற்பார்வையில், K-2 அயனாவரம் காவல் ஆய்வாளர் தலைமையில் இன்று காலை, அயனாவரம், யுனைடெட் இந்தியா நகரில் உள்ள கனடா சங்கம் பள்ளியில் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் 240 பள்ளி மாணவர்கள் போதை ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைளை ஏந்தி, போதை ஒழிப்பு வாசகங்கள் கோஷமிட்டுக் கொண்டு அயனாவரம் மார்க்கெட் வழியாக சுமார் 2 கி.மீ. தூரம் பேரணியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர்.

மேலும், G-5 தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில், இன்று காலை, சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுடன் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து மனித சங்கிலி நடைபெற்றது. இதேபோல, வேப்பேரி சரக உதவி ஆணையாளர் கண்ணன் தலைமையில், G-1 வேப்பேரி காவல் நிலையம் சார்பில், இன்று காலை, வேப்பேரி, வேணுகோபால் செட்டி பள்ளி மாணவர்களுடன், வேப்பேரி பகுதியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் செவன்த் டே பள்ளி மாணவர்களுடன் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது.மேலும், சென்னை பெருநகர காவல், இதர காவல் மாவட்டங்களிலும் சென்னை பெருநகர காவல்துறை சார்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

The post சென்னையில் பல்வேறு இடங்களில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் உறுதிமொழி ஏற்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Minister of ,Tamil Nadu ,Kalaivanar Arena, Chennai ,Tamil ,Nadu ,
× RELATED அரசின் திட்டங்களால் தமிழ்நாடு...