×

நந்தி எனும் யோகி

நன்றி குங்குமம் ஆன்மிகம்

வணக்கம் நலந்தானே!

பசுக் குலத்தையே நந்த குலம் என்றழைப்பர். ஆண் காளையை நந்தி என்றும் பெண் பசுவை நந்தினி என்றும் அழைப்பர். கிருஷ்ணன் பசுவை மேய்த்ததாலே கோபாலன் என்று பெயர் பெற்றான். பசுக்களை மேய்த்ததாலேயே அவர்கள் நந்த கோபர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். ஈசனின் கருவறைக்கு நேரேயுள்ள காளையின் உருவை கொண்டவரையே ரிஷபம் என்கிறோம். காளையின் வடிவில் படுத்திருக்கும் இவரே ரிஷப தேவர் ஆவார். இவரைத்தான் நாம் நந்தி என்றழைக்கிறோம்.

ரிஷப வாகனத்தின் மீதேறிதான் ஈசன் வருவார். அதனாலேயே சிவனை இடபக் கொடியோன் என்பார்கள். நந்தியின் உருவமைப்பே தத்துவக் குவியல். முன்பக்கத்து வலது கால் சற்றே உயர்ந்திருக்கும். அது ஞானமார்க்கத்தை குறிக்கும். சரியை, கிரியை, யோகம் என்ற மூன்று கால்களையும் மடித்து ஒடுக்கிக் கொண்டு நாலம் பாதமாகிய ஞானப்பாதத்தினால் பரம்பொருளைக் கண்டு கொண்டிருக்கிறது என்கிறது ஆகம நூல்கள். நந்துதல் என்ற வேர்ச்சொல்லிலிருந்துதான் நந்தி என்ற சொல் வந்தது.

நந்துதல் என்றால் மேலேறிச் செல்லுதல் என்ற பொருளுண்டு. ஒரு யோகியானவன் பத்மாசனத்தில் அமர்ந்து மூலாதாரக் கனலை எழுப்பும் அமைப்பும் நந்தியிடம் உண்டு. ஔவையார் கூட விநாயகர் அகவலில் ‘மூலாதாரத்தின் மூண்டு ஏழு கனலைக் காலால் எழுப்பும்’ கருத்து அறிவித்து எனும் வரிகள் ரிஷபத்தைத்தான் நினைவுறுத்தும். நந்தியின் துணையால் மேலேறி ஈசனைக் காணவேண்டும் என்பதே முழுப்பொருள். நந்தியின் அருளில்லாது ஈசனைக் காண இயலாது என்கிறது சைவ ஆகமங்கள்.

வேதங்களும், சாஸ்திரங்களும் பசுவிற்குள் எல்லா தெய்வங்களும் உறைவதாக உறுதியாகக் கூறுகின்றன. மகாலட்சுமியின் பூரண அம்சமும், உறைவிடமுமே பசுதான். பசுவின் குளம்படி தூசுகள் பாவத்தையும் சேர்த்து பறக்கடிக்கும். ‘‘யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை’’ என்று திருமூலர் வேண்டுகோள் விடுக்கிறார். இறைவன் எடுக்கும் எல்லா அவதாரங்களும் பசுக்களோடு அன்யோன்யமும், நெருக்கமும் கொண்டிருப்பதை புராணங்கள் வாயிலாகக் காணலாம். மேலும், இன்று நாம் வணங்கும் பெரிய தலங்கள் மற்றும் சிறிய கோயில்களில் உறையும் தெய்வங்களை ஆதிநாட்களில் பசுக்கள்தான் கண்டறிந்தன. பசுக்களே அனுதினமும் பூசித்து மகிழ்ந்த கோயில்களும் பசுவின் பெயராலேயே ஈசன் விளங்கும் ஆலயங்களும் நிறைய உள்ளன.

அவை பசுபதீஸ்வரர், தேனுபுரீஸ்வரர் என்றெல்லாம் வழங்கப்படுகின்றன. மாட்டுப் பொங்கலன்று நாம் ஆவினங்களை தொழுவது மட்டுமல்லாது மற்ற நாட்களிலெல்லாம் கூட பசுக்கள் பூஜித்த தலங்களுக்குச் சென்று பசுக்களின் பக்தி நெறியினையும், அது காட்டும் மார்க்கத்தையும் அறிந்து கொள்வது அவசியமாகிறது.

பசுவின் திருமுகமே தெய்வீகத்தன்மை பெற்றது. கண்களில் சூரிய சந்திரர்களும், முன் உச்சியில் சிவபெருமானும் உறைகின்றனர். சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் புனிதநீர் வெளியேறும் நீரைப் பெறும் வாயிலாகவே கோமுகம் உள்ளது. கோமுகத் தாமரை அத்தனை பவித்ரமானது என்பதற்காகவே ஆலயங்களில் வைத்துள்ளனர். பெரிய வேள்விகளில் நெய் வெளியேறும் பகுதியை பசுவின் முகத்தைப்போன்ற அமைப்பில் வைத்திருப்பர். பாரத தேசம் முழுவதுமே கோமுகி, தேனு தீர்த்தம், பசுவின் குளம்பால் உண்டான தீர்த்தம் என்று எண்ணற்ற புனித தீர்த்தங்கள் அமைந்துள்ளன.

தொகுப்பு: கிருஷ்ணா (பொறுப்பாசிரியர்)

The post நந்தி எனும் யோகி appeared first on Dinakaran.

Tags : Yogi ,Nandi ,Kumkunum Anmigam ,Dinakaran ,
× RELATED ஜெய், யோகி பாபு இணையும் பேபி அன்ட் பேபி