×

தோல்விகளை தவிர்க்க வெளிநாட்டு டி 20 தொடர்களில் இந்திய வீரர்கள் பங்கேற்க வேண்டும்: ராபின் உத்தப்பா பேட்டி

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 டி20 போட்டிகளில் இந்திய அணி அடுத்தடுத்து 2 தோல்விகளை சந்தித்தது ரசிகர்கள் மட்டுமல்லாமல் வீரர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இந்திய முன்னாள் வீரர்கள், ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியை காட்டமாக விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே வெங்கடேஷ் பிரசாத், இந்திய அணியிடம் வெற்றிபெற வேண்டும் என்ற பசியையோ, வெறியையோ காண முடியவில்லை. சில நேரங்களில் அடிப்படைகளை கூட சரியாக செய்யாமல் தோல்வியை தழுவி வருகின்றனர் என்று காட்டமாக விமர்சித்தார்.

இந்நிலையில் இந்திய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கூறுகையில், இனி வரும் காலங்களில் இந்திய அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடினால் மட்டும் போதாது. வெளிநாடு டி20 லீக்குகளிலும் பங்கேற்க பிசிசிஐ அனுமதியளிக்க வேண்டும். அங்கிருக்கும் சூழலை இந்திய அணி வீரர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஐபிஎல் தொடரில் மட்டும் பங்கேற்றால், ஐபிஎல் வியாபாரம் பெருகும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அப்படி செய்தால் ஐசிசி தொடர்களில் இந்திய அணி வீரர்கள் சொதப்புவதற்கும் அதே முடிவு காரணமாக இருக்கும்.

ஏனென்றால் மற்ற நாட்டு கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் நமது நாட்டு பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் போது கூடுதல் சாதகம் ஏற்படுகிறது. ஒவ்வொரு முறையும் நிக்கோலஸ் பூரன் போன்ற வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடும் போது இந்திய வீரர்களின் பந்துவீச்சை அதிகமாக எதிர்கொள்கிறார்கள். அந்த அனுபவம் வெளிநாட்டு வீரர்களுக்கு இருநாட்டு கிரிக்கெட் தொடர்களிலும், ஐசிசி தொடர்களிலும் உதவியாக இருக்கும்.

ஒரு கட்டத்திற்கு மேல் இந்திய பவுலர்களின் வேறுபாடு, டெக்னிக், ஆட்ட நுணுக்கம் அனைத்தையும் ஐபிஎல் தொடர் மூலமாக வெளிநாட்டு வீரர்களால் புரிந்துகொள்ள முடியும். இதுபோன்ற விஷயங்கள் அழுத்தமான நேரங்களிலும் அவர்களுக்கு உதவியாக இருந்து வருகிறது. இதனால் இந்திய வீரர்கள் வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளில் பங்கேற்க வேண்டிய தேவை எழுந்துள்ளது’’ தெரிவித்துள்ளார்.

The post தோல்விகளை தவிர்க்க வெளிநாட்டு டி 20 தொடர்களில் இந்திய வீரர்கள் பங்கேற்க வேண்டும்: ராபின் உத்தப்பா பேட்டி appeared first on Dinakaran.

Tags : T20 series ,Robin Uthappa ,Mumbai ,West Indies ,T20 ,Dinakaran ,
× RELATED உலக கோப்பை டி20 தொடர்: இந்திய அணிக்கு ரோகித் கேப்டன்