×

கந்தனுக்கு அரோகரா கோஷங்களுடன் திருத்தணி முருகன் கோயிலில் இன்று ஆடி பரணி திருவிழா: காவடிகளுடன் பக்தர்கள் குவிந்தனர்

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் இன்று ஆடி பரணி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் ஆடி அஸ்வினியுடன் ஆடி கிருத்திகை விழா நேற்று துவங்கியது. இதையொட்டி இன்று அதிகாலை ஆடிபரணி விழா நடைபெற்றது. இதையடுத்து மூலவர் முருகர், பல்வேறு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். காவடி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள வள்ளி, தெய்வானையுடன் உள்ள முருகரை மனமுருக பக்தர்கள் வேண்டினர்.

ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வடமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இவர்கள் வாகனங்கள் மூலம் பாதயாத்திரையாகவும் மலைக்கோயிலுக்கு வந்தனர். படிக்கட்டு வழியாகவும் வாகனங்கள் மூலமும் சென்று தரிசனம் செய்தனர். கோயிலில் உள்ள சரவண பொய்கை குளம், நல்லான்குளம் ஆகியவற்றில் பக்தர்கள் நீராடிவிட்டு பின்னர் மலைக்கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். பால் காவடி, புஷ்ப காவடிகள் சுமந்துவந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஏராளமான குடும்பத்தினர் மங்கள வாத்தியங்கள் மூலம் சீர்வரிசை பொருட்களுடன் வந்து முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். இன்று அதிகாலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் நீண்டவரிசையில் பல மணி நேரம் காத்திருந்து வழிபட்டனர். பக்தர்கள் வசதிக்காக கோயில் நிர்வாகம், திருத்தணி நகராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறையினர் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளனர். குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுத்துள்ளனர். தனியார் அமைப்புகள் சார்பில், ஆங்காங்கே பக்தர்களுக்கு நீர், மோர், குளிர்பானங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்களின் பாதுகாப்புக்காக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சிபாஸ் கல்யாண் தலைமையில் டிஎஸ்பி விக்னேஷ், தமிழ் மாறன் ஆகியோரின் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

The post கந்தனுக்கு அரோகரா கோஷங்களுடன் திருத்தணி முருகன் கோயிலில் இன்று ஆடி பரணி திருவிழா: காவடிகளுடன் பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Tags : Adi Bharani festival ,Tiruthani Murugan temple ,Thiruthani ,Aadi Bharani festival ,Kandan ,
× RELATED திருத்தணியில் சாலை விரிவாக்கப்பணிகள்...