×

கயிறை மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக்க சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு மானியத்தில் வங்கி கடன் வழங்கப்படுமா?

*உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு

பொள்ளாச்சி : கோவை மாவட்டம் பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு தாலுகா சுற்றுவட்டார கிராம பகுதிகளில் தென்னை விவசாயமே அதிகளவில் உள்ளது. இதனால், பொள்ளாச்சி கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் மட்டும் சுமார் 400க்கும் மேற்பட்ட தென்னை நார் தொழிற்சாலைகள் செயல்படுகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் நார் மற்றும் நார் கழிவுகள், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதில், பிரான்ஸ், கொரியா, இங்கிலாந்து சீனா, துபாய் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி முதல் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பிலான தென்னை நார் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.

ஆனால் அண்மையில், சீனா மற்றும் அமெரிக்க உள்ளிட்ட வெளி நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியாலும், பொள்ளாச்சி பகுதில் உற்பத்தியாகும் நாரின் விலை 30 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதிலும், தென்னையிலிருந்து பிரித்து கயிறு தயாரிக்கும் சிறு, குறு தொழில் நிறுவனத்தினர் போதிய லாபம் கிடைக்காமல் வேதனையடைகின்றனர். இதனால், பல தொழிற்சாலைகள் செயல்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. பொள்ளாச்சி பகுதியில் நார் மற்றும் கயிரை மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்வதுதான் ஒரே தீர்வாக இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, நார் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட சுற்றுவட்டார பகுதியில் உள்ள தென்னையில் உற்பத்தியாகும் தேங்காய் மட்டையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் வெள்ளை மற்றும் பிரவுன் கலரில் இரண்டு தரத்துடன் கூடிய நார், உற்பத்திக்கு பிறகு ஒதுக்கிவைக்கப்படும் நார் கழிவு துகளும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு, நெகமம், கோட்டூர், ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் மட்டும் சுமார் 500-க்கும் மேற்பட்ட கயிறு திரிக்கும் சிறு தொழிற்சாலை உள்ளது. அதனை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு உற்பத்தியாகும் நார் கயிறு, பெரும்பாலும் வெளியிடங்களுக்கே அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு அதனை, மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக்குவதால், வியாபாரிகளுக்கு நல்ல வருவாய் ஈட்டுகிறது. ஆனால், பொள்ளாச்சி பகுதியில், கயிறு மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக்கும் தொழிற்சாலைகள், ஒருசில தொழிற்சாலைகளே உள்ளது.

பொள்ளாச்சியிலிருந்து ஆண்டுக்கு 1200 மெட்ரிக் டன் ஏற்றுமதி இருக்கும், ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுக்கு 800 மெட்ரிக் டன் கயிறே ஏற்றுமதியாகிறது. இதனால், பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமர் 50 சதவீத கயிறு உற்பத்தி செய்யும் சிறு தொழில் நலிவடைய துவங்கியுள்ளது.

அதில் சில தொழிற்சாலைகள் செயல்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, பொள்ளாச்சி பகுதியில் சிறுகுறு தொழில் மூலம் கயிறு திரிக்கும் தொழிலில் ஈடுபடுவோருக்கு, மின்சார சலுகை வழங்குவதுடன், நாரை கால் மிதியடி மற்றும் வலை உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்த மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்றி, இங்கிருந்தே நேரடியாக வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் மட்டுமே, கயிறு உற்பத்தியாளர்கள் மற்றும் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் அதிகரிக்கும். ஒவ்வொரு உற்பத்தியாளர்களும், கயிறை மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்றுவதற்கான நவீன இயந்திரம் வாங்குவதற்கு, மானியத்தில் உரிய முறையில் வங்கி கடன் வழங்கி உதவிபுரிய, ஒன்றிய மற்றும் மாநில அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post கயிறை மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக்க சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு மானியத்தில் வங்கி கடன் வழங்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Anaimalai ,Kinathukkadavu ,Coimbatore ,Dinakaran ,
× RELATED ஆர்ப்பாட்டத்துக்கு வந்த விவசாயி தற்கொலை முயற்சி-பரபரப்பு