×

மத்துருட்டு பகுதியில் விளைச்சல் அதிகரிப்பால் முள்ளங்கி விலை சரிவு

*விவசாயிகள் கவலை

நாமகிரிப்பேட்டை : நாமகிரிப்பேட்டை அடுத்த மத்துருட்டு பகுதியில் முள்ளங்கி விளைச்சல் அதிகரிப்பின் காரணமாக, விலை சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் நெல், கம்பு, ேசாளம் மற்றும் கரும்பு மற்றும் இதற்கு அடுத்து மரவள்ளி கிழங்கு அதிகளவில் சாகுபடி செய்வது வழக்கம். இப்பயிர்களுக்கு அடுத்து காய்கறிகளில் வெண்டை காய், கத்தரி காய், முருங்கை, பாகற்காய் மற்றும் முள்ளங்கி அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது.

இதில் நாமக்கல் மாவட்டத்தில் நாமகிரிப்பேட்டை அடுத்த உரம்பு, பிலிப்பாக்குட்டை, ஒன்பதாம்பாலிக்காடு, நாரைக்கிணறு, முள்ளுக்குறிச்சி, சிங்கிலியங்கோம்பை, மூலக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் முள்ளங்கி அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதங்களில் முள்ளங்கி சாகுபடியில் விவசாயிகள் அதிகம் ஈடுபட்டனர். தற்போது செழித்து வளர்ந்த முள்ளங்கி அறுவடை பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

விளைச்சல் அதிகரித்த நிலையில், விலை சரிந்துள்ளதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘முள்ளங்கி பயிரிட்ட 40 முதல் 45 நாட்களில் அறுவடைக்கு தயாராகும். ஆட்கள் கூலி, உரம் இடுதல், களைக்கொல்லி தெளித்தல் என ஏக்கருக்கு ₹35 ஆயிரம் முதல் 45 ஆயிரம் செலவாகிறது. ஒரு சிப்பம் 35 கிலோ முதல் 40 கிலோ என ஒரு ஏக்கருக்கு 700 சிப்பம் வரை அறுவடை செய்யலாம். மெட்டாலா, தலைவாசல், ராசிபுரம் மார்க்கெட்டில் தற்போது ஒரு கிலோ ₹8 முதல் ₹10 வரை மட்டுமே விற்பனையாகிறது. இதனால் செலவு செய்த தொகைக்கு கூட விற்க முடியவில்லை,’ என்றனர்.

The post மத்துருட்டு பகுதியில் விளைச்சல் அதிகரிப்பால் முள்ளங்கி விலை சரிவு appeared first on Dinakaran.

Tags : Namagiripetta ,Namagrippet ,Dinakaran ,
× RELATED அரசு பள்ளியில் மயங்கி விழுந்து மாணவி சாவு