×

பல ஆண்டுகளாக வெள்ள நேரத்தில் தத்தளிக்கும் மலைக்கிராம மக்கள் கொட்டகுடி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும்

*மண்சாலையையும் தார்சாலையை மாற்ற கோரிக்கை

போடி : போடி அருகே மேலப்பரவு கொட்டகுடி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் என மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டம், போடி அருகே மேற்கு தொடர்ச்சி மலை, போடி மெட்டு குரங்கணி மலை அடிவாரத்தில் முந்தல் சாலை ஆண்டி ஓடை அருகே பிரிவிலிருந்து பாண்டி முனீஸ்வரன் கோயில் சாலையில் 3 கி.மீ தொலைவில் மேலப்பரவு உள்ளது. இங்கு மலைக்கிராமத்தில் மலைவாழ் மக்கள் சுமார் 26 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இச்சாலையின் குறுக்கே அகன்ற அளவிலும் நீளமான தடுப்பணையோடு கொட்ட குடியாறு கடக்கிறது. இந்த ஆற்றுக்குள் இறங்கித்தான் இந்த மேலப்பரவு மலைகிராமத்திற்கு செல்ல முடியும். சாதாரண காலங்களில் சிறிதளவு மழைநீர் செல்லும்போது லாரி, டிராக்டர்கள், டூவீலர்கள் என ஆற்றுக்குள் இறக்கி மேலப்பரவிற்கும், போடிக்கும் வந்து செல்ல முடியும்.

ஆனால் வருடத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் 6 மாதம் வரை மழை பெய்யும் போது கொட்டகுடி ஆற்றில் எடுக்கும் பெரும் வெள்ளம் நேரங்களில் மலைக்கு செல்ல முடியாது விவசாயிகளும், கூலி தொழிலாளர் களும் ஆற்றை கடந்து விவசாயமும் செய்ய இயலாது.இச்சாலை துவங்கியவுடன் இருபுறங்களிலும் மா, தென்னை, காய் கறிகள், கரும்பு, பாக்கு, இலவு மற்றும் மேலப்பரவு ஒட்டி யுள்ள வடக்கு மேற்கு மலைப்பகுதியில் காபி போன்ற பயிர்களும் விளைவித்து எடுக்கப்படுகிறது.

இதனால் இப்பகுதிகளை சுற்றி பல நூற்றுக்கணக்கான ஏக்கரில் நிலங்கள் இருப்பதால் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட விவசாயிகள் வரு டம் முழுவதும் இச்சாலையில் பயணித்து ஆகவேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த மேலப்பரவு மலைக் கிராமத் தில் உள்ள மலைவாழ் மக்களுக்கு வீடுகள் இல்லாத காரணத்தால் திமுக ஆட்சி காலத்தில் தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டு காலனியாக மாற்றி தரப்பட்டது.

குடியிருந்து வரும் மலைவாழ் மக்கள் இங்குள்ள தோட்ட பகுதிகளுக்கும், மேற்கு மலைப்பகுதிகளுக்கும் வேலைக்கு சென்று திரும்புகின்றனர். பொதுவாக குரங்கணி கொட்டகுடி பகுதியிலிருந்து வருகின்ற நீண்ட நெடிய அகன்ற கொட்டகுடி ஆறு கடப்பதால்,மழையால் காட்டாறு வெள்ளம் பெருக்கெடுக்கும் போது முற்றிலும் விவசாயிகளும், மேலப்பரவு மலைவாழ் மக்கள் உட்பட யாரும் கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. சாதாரணமாக விவசாயிகள் தொ ழிலாளர்கள் மலைவாழ் மக்கள் தங்களுக்கு தேவையான அரிசி பருப்புகள் ஜவுளி நகை, அனைத்து அரசு அலுவலகப்பணிகள், அரசு மருத்துவமனைகள் என 7 கி.மீ தூரம் போடிக்கு சென்று அனைத்தும் வாங்கிக் கொண்டு மறுபடியும் திரும்பி வரவேண்டும். குறைந்தளவு தண்ணீர் செல்லும் போது ஆற்றுக்குள் தாராளமாக இறங்கி கடந்து செல்வார்கள்.

வருடத்தில் ஒரு எட்டு மாதம் வரையில் தென்கிழக்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை நேரங்களில் மற்றும் சாதாரண மழையிலும் திடீரென வெள்ளம் பெருக்கெடுப்பது வழக்கமாக இருக்கிறது. அது போன்ற நேரங்களில் முற்றிலும் கடக்க முடியாமல் இருபுறம் கரை பகுதிகளில் தங்கிவிடும் அவலம் நீடித்து வருகிறது. தற்போது திடீர் திடீரென மழை வெள்ளம் போது ஆற்றை கடக்க முடியாமல் வீடுகளுக்குக்குள்ளே முடங்கி கிடக்க வேண்டிய சூழல் உள்ளது.

இதுபோன்ற நேரங்களில் பள்ளி கல்லூரிக்கு செல்லும் குழந்தைகள், மாணவ மாணவியர்கள் தான் பெரும் அவதிக்குள்ளாகி நான்கைந்து பேர்கள் கைகளைப் பிடித்து கோர்த்து கொண்டு உயிரை பணயம் வைத்து கயிற்களையும் கட்டிக்கொண்டு அபாயகரமாக கடக்கும் நிலை உள்ளது. எனவே மலைக்கிராம மக்கள் மற்றும் அனைவரின் நலன் கருதி கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டி தர வேண்டும் வேண்டும் மேலப்பரவு மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மனுக்களுக்கு செவி சாய்க்காத எம்எல்ஏ

விவசாயிகள் மலைவாழ் மக்கள் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் ஆற்று குறுக்கே நீண்ட பாலம் கட்டி தர வேண்டும், மேலும் 7 கிமீ மண் சாலை சீரமைத்து தார்ச்சாலையாக மாற்றி தர வேண்டும் என புகார் மனு அளித்தோம். மேலும் போடி எம்எல்ஏவாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் நேரடியாக மனுக்கள் கொடுத்தும், கோரிக்கை விடுத்தும் எந்த வித பயனுமில்லை.

இதனையடுத்து கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தல் நெருங்கிய நேரத்தில் மலை வாழ் மக்களிடம் நேரில் சென்று ஆற்றுப்பகுதியை பார்வையிட்டு விரைவில் பாலம் கட்டித் தரப்படும் என்று உறுதியளித்தார். அப்படி உறுதி அளித்து வந்ததோடு சரி அதற்கான எந்தப்பணியும் இதுநாள் வரை நடைபெற வில்லை. தற்போது 3வது முறையாக போடி எம்எல்ஏவாக ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். அதற்கான பணிகள் செய்வதற்கான முனைப்புகள் இன்னும் காட்டப்படவில்லை. எனவே மாவட்ட அதிகாரிகள் இப்பகுதியினை நேரில் ஆய்வு செய்து பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றனர்.

The post பல ஆண்டுகளாக வெள்ள நேரத்தில் தத்தளிக்கும் மலைக்கிராம மக்கள் கொட்டகுடி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Kotakudi river ,Mansalai ,Dharsalai ,Bodi ,
× RELATED கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது