×

பிணந்தின்னி கழுகுகளின் எண்ணிக்கையை துல்லியமாக மதிப்பிட ‘ரோடு ட்ரான்செக்ட்’ முறையே சிறந்தது

*ஊட்டி ஆராய்ச்சி மாணவரின் கட்டுரை வெளியானது

ஊட்டி : நீலகிரி மாவட்டம் ஊட்டி சோலூர், தூபக்கண்டி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் ஊட்டி அரசு கலை கல்லூரியில் முதுமலை மற்றும் சத்தியமங்கலம் வனப்பகுதிகளில் காணப்படும் பிணந்தின்னி கழுகுகளின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிடும் குறித்த பிஎச்டி., ஆராய்ச்சி படிப்பு பயின்று வந்தார்.இவரது ஆய்வு முடிவில் பிணந்தின்னி கழுகுகளின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கு தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் பாய்ண்ட் கவுண்ட் முறை விட, ‘ரோடு ட்ரான்செக்ட்’ முறை சிறந்தது என உறுதி செய்துள்ளார். ‘

இவரது ஆய்வு கட்டுரையை அங்கீகரித்து ஐேராப்பிய நாடுகளில் ஒன்றான லாட்வியா நாட்டில் உள்ள லாட்வியா பல்கலைக்கழகத்தால் வெளியிடப்படும் சர்வதேச மதிப்பாய்வு இதழான ‘சுற்றுச்சூழல் மற்றும் பரிசோதனை உயிரியல்’ இதழில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பிஎச்டி., ஆராய்ச்சி படிப்பை முடித்த மாணவர் மணிகண்டன் கூறுகையில்: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பிணந்தின்னி கழுகுகளின் எண்ணிக்கையை மூன்று முறைகளில் 36 மாதங்கள் அதாவது 2018 முதல் 2021 வரை ஆய்வு செய்யப்பட்டது. ரோடு டிரான்செக்ட், இறந்த சடலத்தை கண்காணித்தல் மற்றும் பிணந்தின்னி கழுகுகளின் கூடுகளை எண்ணுதல் ஆகிய மூன்று முறைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு முறைகளின் சவால்கள் மற்றும் வரம்புகள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது, இதில் ‘ரோடு ட்ரான்செக்ட்’ (Road Transect) முறை சிறந்தது என்பது தெரியவந்தது.

ஏனெனில் ரோடு ட்ரான்செக்ட் முறையில் நீலகிரியில் உள்ள 4 வகை பிணந்தின்னி கழுகுகளான வெண்முதுகு, கருங்கழுத்து, செந்தலை கருங்கழுத்து,மஞ்சள் முக பிணம் தின்னும் கழுகு மற்றும் இமயமலையில் இருந்து இடம் பெயர்ந்து வரும் கழுகுகளான இமாலையன் பிணம் தின்னும் கழுகு மற்றும் ஊதா முக பிணம் தின்னும் கழுகு ஆகியவற்றை காணமுடியும். ஆனால் மற்ற இரண்டு முறைகளான பிணந்தின்னி கழுகுகளின் கூடுகளை எண்ணுதல் முறையில் வெண்முதுகு மற்றும் கருங்கழுத்து கூடுகளை மட்டுமே கணக்கெடுக்க முடிந்தது.மற்ற இரண்டு கழுகுகளான செந்தலை மற்றும் மஞ்சள் முக பிணம் தின்னும் கழுகுகளின் கூடுகளை கண்டறிய முடியவில்லை.

மற்றொரு முறையான இறந்த விலங்குகளின் உடல்களை கண்காணித்தல் முறை சிரமமாக இருந்தது. பிணந்தின்னி கழுகுகளுக்கு புலி வேட்டையாடிய விலங்குகள் தான் பெரும்பாலும் உணவாக கிடைக்கின்றன ஆனால் இந்த இறந்த விலங்குகளை மேற்கண்ட உன்னி செடியானது மூடிவிடுவதால், கழுகுகளால் இறந்த விலங்கை காண முடிவதில்லை. இதனால் கழுகுகளுக்கு உணவு பற்றாக்குறையும் மற்றும் இறந்த சடலங்களில் கழுகுகளின் வருகையை கண்காணிப்பதும் சிரமம்.

ரோடு ட்ரான்செக்ட்’ முறை ஆய்வு செய்த போது முதுமலையில் 117 வெண்முதுகு கழுகு, 11 கருங்கழுத்து கழுகு, 5 செந்தலை கழுகு மற்றும் 2 மஞ்சள் முக கழுகு எண்ணிக்கை இருந்தது குறிப்பிடத்தக்கது. கேரளாவின் வயநாடு, முதுமலை புலிகள் காப்பகம், பந்திப்பூர் புலிகள் காப்பகம் மற்றும் நாகர்ஹோலே புலிகள் காப்பகம் பகுதிகளில் பிணந்தின்னி கழுகுகளின் எண்ணிக்கையை கணக்கிட தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களால் சமீபத்தில் பாய்ண்ட் கவுண்ட் முறையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த முறையானது தவறானது என்று பறவை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே துல்லியமாக மதிப்பீடு செய்ய ‘ரோடு ட்ரான்செக்ட்’ முறையே சிறந்தது. இதன்மூலம் எதிர்காலத்தில் ‘ரோடு ட்ரான்செக்ட்’ பயன்படுத்தி எந்தவித சந்தேகமும் இன்றி பினதின்னி கழுகுகளை கணக்கெடுப்பு செய்யலாம். இதுதொடர்பான எனது ஆய்வு கட்டுரை ஐேராப்பிய நாடுகளில் ஒன்றான லாட்வியா நாட்டில் உள்ள லாட்வியா பல்கலைக்கழகத்தால் வெளியிடப்படும் சர்வதேச மதிப்பாய்வு இதழான ‘சுற்றுச்சூழல் மற்றும் பரிசோதனை உயிரியல்’ இதழில் வெளியாகியுள்ளது. எனது ஆய்விற்கு வழிகாட்டியாக இருந்த பேராசிரியர் கண்ணன், சக ஆராய்ச்சியாளர் பைஜூ ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன், என்றார்.

The post பிணந்தின்னி கழுகுகளின் எண்ணிக்கையை துல்லியமாக மதிப்பிட ‘ரோடு ட்ரான்செக்ட்’ முறையே சிறந்தது appeared first on Dinakaran.

Tags : Ooty ,Thupakandi village ,Solur, Nilgiris district ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...