×

கிருஷ்ணகிரியில் இருந்து வெளிநாடுகளுக்கு ₹125 கோடிக்கு மாங்கூழ் ஏற்றுமதி

*மாங்கனி கண்காட்சி நிறைவு விழாவில் கலெக்டர் தகவல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள 25 தொழிற்சாலைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மாங்கூழ், வெளிநாடுகளுக்கு ₹125 கோடி அளவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக மாங்கனி கண்காட்சி நிறைவு விழாவில் கலெக்டர் தெரிவித்தார். கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், 29வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நிறைவு விழா நேற்று மாலை நடந்தது.

விழாவில் கலெக்டர் சரயு, பர்கூர் எம்எல்ஏ மதியழகன் ஆகியோர் பங்கேற்று, சிறந்த அரங்குகள் அமைத்த அரசுத்துறை அலுவலர்களுக்கு கேடயம், பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் சிறந்த மா விவசாயிகளுக்கு பரிசுகளை வழங்கினர். கண்காட்சியில் சிறந்த அரங்குகள் அமைத்த அரசு துறைகளில் முதல் பரிசாக தோட்டக்கலைத்துறைக்கும், இரண்டாம் பரிசாக கிருஷ்ணகிரி நகராட்சிக்கும், மூன்றாம் பரிசாக வேளாண்மைத்துறைக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

மேலும், தோட்டக்கலைத்துறை சார்பில் 16 மா உற்பத்தி செய்யும் விவசாயிகள், அனைத்து அரசுத்துறைகள் சார்பில் அரங்குகள் அமைத்த 32 அரசு துறை அலுவலர்களுக்கு சான்றிதழ்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக நடத்தப்பட்ட ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற 15 மாணவிகள், கோலப்போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் 15 பேர் என 81 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

விழாவில் கலெக்டர் சரயு பேசியதாவது: கிருஷ்ணகிரியில் 29வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி, கடந்த ஜூலை 5ம் தேதி முதல் இன்று (7ம்தேதி) வரை 33 நாட்கள் நடந்தது. இதில் மக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. மேலும், அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், அரசுத்துறை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. தோட்டக்கலைத்துறை சார்பில் அனைத்து வகையான மா ரகங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது. 32 நாட்கள் நடைபெற்ற இந்த கண்காட்சியை நாள்தோறும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் என 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்களான பழங்கள், காய்கறிகள், மலர்கள் மற்றும் நறுமனப்பயிர்கள் சுமார் 99,150 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அவற்றில் மா மட்டும் 81 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு 2.60 லட்சம் மெட்ரிக் டன் அளவில் மா உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மொத்தம் மா உற்பத்தியில் 1.20 லட்சம் மெட்ரிக் டன், மாம்பழ கூழ் உற்பத்திக்கு உபயோகப்படுத்தப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெங்களூரா, அல்போன்சா, பங்கனப்பள்ளி, நீலம், மல்கோவா, காலப்பாடு, ரூமானி, செந்தூரா, சேலம் பெங்களூரா, இமாம்பசந்த் மற்றும் மல்லிகா ஆகிய ரங்கள் பெருமளவில் பயிரிடப்பட்டு வருகிறது. மேலும், அல்போன்சா, பெங்களூரா மற்றும் நீலம் அகிய ரகங்கள் மாம்பழக்கூழ் மற்றும் இதர பயன்பாட்டிற்கு உகந்ததாக உள்ளது.

மாவட்டத்தில் உள்ள சுமார் 25 மாம்பழக்கூழ் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் மாம்பழ கூழ், சவுதி அரேபியா, துபாய், மலேசியா, சிங்கப்பூர், ஈரான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளுக்கு ₹125 கோடி அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், குடிசைத்தொழில் மூலமாக மாம்பழச்சாறு, ஜாம், ஜெல்லி மற்றும் ஊறுகாய் தயார் செய்து வணிகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், இந்த கண்காட்சி மூலம், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், பல்வேறு மாவட்டங்களில் இருந்து மா சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் பங்கு பெற்றதால், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் அனுபவங்களை பரிமாற்றம் செய்து கொள்ள ஏதுவாக இருந்தது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி ஆர்டிஓ பாபு, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் பூபதி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் (பொ) கிருஷ்ணன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் டாக்டர் ராஜேந்திரன், சிஇஓ மகேஸ்வரி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், கிருஷ்ணகிரி நகர்மன்ற தலைவர் பரிதாநவாப், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சீனிவாசன், துணை ஆட்சியர் (பயிற்சி) தாட்சாயிணி உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post கிருஷ்ணகிரியில் இருந்து வெளிநாடுகளுக்கு ₹125 கோடிக்கு மாங்கூழ் ஏற்றுமதி appeared first on Dinakaran.

Tags : Mangkur ,Krishnagiri ,Mangani Exhibition Closing ceremony ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி அருகே உள்ள போகனபள்ளியில்...