×

மாத்தூர் தொட்டிப்பாலம்

சுற்றுலா செல்லும்போது அதை வெறும் பொழுதுபோக்காக மட்டுமில்லாமல் பொது அறிவுக்கும், சிந்தனைத் திறனை மேம்படுத்துவதற்கும் பயனுள்ளதாக அமைத்துக்கொள்வது நம் கையில்தான் உள்ளது. பெற்றோர்கள் இதில் கவனம் செலுத்தி பிள்ளைகளை அதுபோன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். மனதுக்கு மகிழ்ச்சியைத் தருவதோடு கட்டுமானம் குறித்த சிந்தனையை தூண்டும் அருமையான இடம் ஒன்று உள்ளது. அது நம் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள மாத்தூர் தொட்டிப் பாலம்தான். இது கன்னியாகுமரிக்கு புகழ் சேர்ப்பதோடு தெற்கு ஆசியாவிலேயே மிக நீளமான உயரமான பாலம் என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னியாகுமரி மாவட்டம், அருவிக்கரை ஊராட்சி மன்றப் பகுதியில் மாத்தூர் தொட்டிப் பாலம் அமைந்துள்ளது. இது திருவட்டாறிலிருந்து 3 கி.மீ தொலைவிலும் இந்தியாவின் தென்முனையாகிய கன்னியாகுமரியிலிருந்து 60 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இவ்வூர் குழித்துறை ரயில் நிலையத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், திருவனந்தபுரம் வானூர்தி நிலையத்திலிருந்து 70 கி.மீ. தொலைவிலும் அமைந்திருக்கிறது.இது தொட்டி வடிவில் கட்டப்பட்டிருப்பதால் தொட்டிப்பாலம் எனவும், இரு மலைகளுக்கு நடுவே தொட்டில் போன்ற அமைப்பில் இருப்பதால் தொட்டில்பாலம் எனவும் அழைக்கப்படுகிறது.

வறட்சியைத் தீர்ப்பதற்காக 1962ம் ஆண்டு தமிழ்நாடு முதல்வராக இருந்த காமராஜரால் தொடங்கப்பட்ட இப்பாலம் 1966ல் முழுமையாகக் கட்டப்பட்டு நிறைவுபெற்றது. இதற்கான நீர் பேச்சிப்பாறை மற்றும் சிற்றாறு அணைகளிலிருந்து கோதையாறு கால்வாய் வழியாகக் கொண்டுவரப்படுகிறது. இந்தப் பாலத்தின் கீழ் பரளியாறு என்ற சிற்றாறு பாய்கிறது.தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக மலைப்பாங்கான காடுகளாக இருந்த மாத்தூர் பகுதியில் உள்ள கணியான் பாறை என்ற மலையையும்,

கூட்டுவாயுப்பாறை என்ற மலையையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இரண்டு மலைகளை இணைக்கும் இந்த பாலம் நீளவாக்கில் இந்த பாலம் 115 அடி உயரமும், மீட்டா் நீளமும் கொண்டது. இந்த பாலத்தின் உள்ளே இருக்கும் தண்ணீா் எடுத்துச் செல்லும் பகுதியானது, 7 அடி உயரமும், 7 அடி 6 அங்குல அகலமும் கொண்டது. இதை மொத்தம் 28 தூண்கள் தாங்கி நிற்கின்றன. ஒவ்வொரு தூணின் சுற்றளவும் 32 அடியாகும். அணையிலிருந்து வரும் நீர் முதலில் மாத்தூர் பாலத்திற்கும் அதன்பின் செங்கோடி மற்றும் வடக்குநாட்டுப் பாலங்கள் வழியாகத் தேங்காய்ப்பட்டணம் கிராமத்திற்கும் செல்கின்றது. மாத்தூர் தொட்டிப் பாலம் வழியாகக் கொண்டுசெல்லப்படும் நீர் கன்னியாகுமரி மாவட்டத்தின் கல்குளம், விளவங்கோடு ஆகிய இரு வட்டங்களில் உள்ள ஊர்களின் விவசாய நிலங்களின் நீர்ப்பாசனத்திற்குப் பயன்படுகிறது. விளவங்கோடு கல்குளம் பகுதிகளின் விவசாய வளர்ச்சிக்காக அப்போதைய தமிழக முதலமைச்சர் காமராஜர் முயற்சியின் காரணமாக கட்டப்பட்ட இந்தப் பாலம் ஒரு சுற்றுலாத்தலமாக மாறியிருக்கிறது. இந்தப் பாலத்தை பார்வையிட மாவட்ட நிர்வாகம் சிறப்பு வசதிகள் செய்து உள்ளது. இங்கு குழந்தைகள் பூங்காவும் நீராடும் துறையும் இருக்கின்றன.

The post மாத்தூர் தொட்டிப்பாலம் appeared first on Dinakaran.

Tags : Mathur tank ,Mathur Tintipalaam ,
× RELATED மாத்தூர் தொட்டிப்பாலம் அருகே ஆற்று...